அகதி
வழியறியா பயணம் , பெயரறியா நகரம் ,
இன்றே பிறந்த வீடு ,கடந்து செல்லும் மேகங்கள்,
காலத்தால் கடந்த சில நிகழ்வுகளை நினைவுப்
படுத்திக் கொண்டே நகர்ந்து சென்றன..
போர் ,இந்த சொல் என் காதில் கேட்கும்
போதெல்லாம் இரக்கமற்ற அந்த இறைவன்
முகத்தில் எச்சில் உமிழக் கூட தோன்றும்,
துப்பாக்கி குண்டுகள் தாலாட்டுப் பாட
இரத்த அபிஷேகம் நடைபெற்று நடு வீதியில்
வீசப்பட்டன,கழிவைத் தின்று பசி தீர்க்கும்
பிள்ளைகளுக்கு கற்பை விற்று கஞ்சி ஊற்றும்
தாய்மார்களின் எண்ணிக்கை ஏராளம் இங்கே,
ஆனால் அங்கோ பசி, இனப்பசி எம் குலத்
தோழிமார்களின் மார்பறுத்து இரத்த ருசி தீர்த்துக்
கொள்ளும் காம அரக்கர்களின் காரிருள் தேசம்.,
இன வேறுபாட்டை இதயமாகக் கொண்டு வேறுபாடு
இல்லாமல் சின்ன பெண்கள் கூட சீரழிக்கப்பட்டனர்
அதற்கான தடயங்கள் வெட்டி எறியப்பட்டன.,
சடலமாகிய சகாப்தங்கள் சிதறிக் கிடந்த சாலைகளைக்
கடந்து விதி வழி சென்றோம் ,கடல் அன்னை அமைதி காத்தாள்,
வானோ வாய் விட்டு அழுதது,கருப்பு துணியை கண்ணில்
கட்டினான் கதிரவன்., தடுமாறி ..தடம்மாறி வந்து திரும்பிப் பார்த்தேன்,
நான் பிறந்த மண், வளர்ந்த வீடு, புதையுண்ட தாய்,
உழுதிட்ட நிலம், மடியில் உயிர்விட்ட மனைவி,
பெயர் வைக்காத பிள்ளைகள், திருவிழா கொண்ட
கோவில், அகரமிட்ட பள்ளிசாலை,தோள்கொடுத்த உறவுகள்,
உயிர்த் தோழர்கள், எதிர்கால இலட்சியம்,
உப்பிட்ட கடல் அன்னை, உடைந்து சிதறிய
என் மனம், எல்லாம் விட்டு சென்ற காலடி
தடமாய் அழிந்து கொண்டிருந்தது .,
இத்தனையும் முடிந்து இன்று உயிர் கொண்ட
சடலமாய் முகாமில் தனித்து யாசிக்கிறேன்
இறைவனிடம் , இவர்கள் பகைப்போரில்
பாமரர் நாங்கள் செய்த தீங்கு யாதென..