என்னை மட்டும் நேசிப்பதாக

இரவைக் கூட பகலாய் மாற்றி
.....எடுத்துத் தருவேன் உன்கையில் - அந்த
சிரமத்தில்என் இதயம் அறுந்தால்
.....போட்டுக் கொள்வேன் ஒருதையல்

கோடை வெயிலும் குளிரும் உந்தன்
.....கண்கள் பொழியும் பார்வையிலே! - உன்
ஆடையோடு என்னைச் சேர்த்து
.....போர்த்திக் கொள்ளடி போர்வையிலே!

புரிந்து வாழ காதல் நமக்குள்
.....இருக்கும் வரையில் என்னபயம் - நம்மை
பிரிக்க நினைத்த எமனும் கூட
.....தோற்றுப் போனான் பலசமயம்

மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால்
.....மருந்தாய் எனக்கொரு முத்தமிடு - நான்
பிழைத்து வந்து மீண்டும் உனக்கு
.....திருப்பிக் கொடுக்க மிச்சம்விடு

ரத்தம் என்னுள் உறைந்தது உந்தன்
.....இதழ்கள் கொடுத்த முத்தத்தில் - நான்
செத்துப்போகிறேன் ஒவ்வோர் நாளும்
.....காதல் நடத்தும் யுத்தத்தில்

சுழலும் பூமி என்னைச் சுற்றி
.....வருவது போல ஒருபிரம்மை - உன்னை
இழந்தால் என்ன செய்வ தென்று
.....எண்ணிப் பார்ப்பதே பெருங்கொடுமை

மாமிசம் உண்ணும் உயிர்களுக் கிங்கு
.....மனிதன் என்னும் முகமூடி - இந்த
பூமியில் நீயே அதிசயம் என்று
.....நான் வந்தேன் உன் முகம்தேடி

வயிற்றில் எரிமலை வெடித்தும் ஏனோ
.....வெப்பம் எனக்குள் ஏறவில்லை - என்
உயிரை நீயே எடுத்துக் கொண்டதால்
.....உடலில் ஏனோ பாரமில்லை

மந்திரம் போல உன்பெயர் சொல்லி
.....மயங்கி விழுந்தேன் ஓரிரவில் - நீ
வந்து பார்த்தும் அப்பொழுதெனக்குள்
.....ஒன்று குறைந்தது ஆறறிவில்

ஈசல்போல்நான் ஒருநொடிப் பொழுதில்
.....தொலைந்து போனேன் உனக்குள்ளே ! - நீஎன்
வாசல் கடந்து செல்லும் போதே
.....காய்ச்சல் வந்தது எனக்குள்ளே !

கயிற்றைப் போல காதல் என்னை
......கட்டிப் போட்டது ஒருபிடியில் - அதில்என்
உயிரின் துளிகள் பிரிவ தற்குள்
.....ஒருநாள் இடம்தா உன்மடியில்

மறந்து உன்னை வாழ்வதென்றால்
.....இறந்து போவேன் அப்பொழுதே ! - வாய்
திறந்து சொல்லடி என்னை மட்டும்
.....நேசிப்பதாக இப்பொழுதே!

எழுதியவர் : ஜின்னா (17-Oct-14, 8:13 pm)
பார்வை : 560

மேலே