ஒரு கைதியின் புலம்பல்

நாலு சுவர்க் கொண்ட
இருட்டுச் சிறையில்
ஒரு தண்ணீர் குடத்தின்
துணையுடன் நான்
பொழுது போக எண்ணுவதற்கு
ஐந்து கம்பிகள்

யாரோ செய்த பிழை
என் தலையில் வந்து விழ
நீதிமன்ற படியேறினேன்
நான் பிழையில்லை என
பல சாட்சிகள் இருந்தும்
நீதி தேவதை கண்
திறக்கவில்லை

என் வரை நீதி பொய்யாக
காக்கி உடையணிந்தோர்
இரக்கமின்றி இழுத்து வந்து
இங்கே எரிந்து சென்றனர்

அன்றிலிருந்து இன்று வரை
இருட்டுச் சிறையில்
தனிமைக் கூண்டில்
அடைக்கப் பட்டு கிடக்கிறேன்

நிலவின் நிறமும்
மலரின் மணமும்
நதியின் குளிர்மையும்
எனக்கு இப்போ யாபகமில்லை

நாக்கு சுவைக்கையில்
உணவின் சுவையும்
காது கேட்கையில்
தமிழின் இனிமையும்
கண் பார்க்கையில்
இயற்கையின் அழகும்
என்னை விட்டு பிரிந்து போக
ஐம்புலன்களும் மறத்து விட்டது

தூங்கப் போகையில் தாயின்
தாலாட்டுக்குப் பதில்
எவனோ ஒரு கைதியின்
மரண ஓலம்
காலை கண் விழிக்கையில்
பறவைகளின் பாடலுக்குப் பதில்
காக்கி பூட்ஸ்களின் ஓசை

உலகில் பல வர்ணங்கள்
இருந்தும் இப்போது நான்
அறியும் வர்ணம்
கருப்பு வெள்ளை அவை
அறை இருட்டின் நிறமும்
என் உடையின் நிறமும்

இருளின் கருப்பு நிறம்
ஆடையின் வெள்ளை நிறத்தை
மறைப்பது போல்
நீதி தேவதையின் கறுப்புத் துணி
சத்திய ஒளியை மறைத்ததோ ?
என் தவறின்மை விளங்கவில்லையோ?

காற்றே ! நீதி தேவதையின்
கறுப்புத் துணியை அவிழ்ப்பாயா ?
சத்திய ஒளி காண வழி செய்வாயா?

எழுதியவர் : fasrina (19-Oct-14, 11:33 am)
பார்வை : 63

மேலே