இனி ஒரு விதி செய்வோம் - நாகூர் கவி

தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...

விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....

நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...

அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?

உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?

தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...

வண்ண ஓவியம் தீட்ட
அந்த புள்ளிதானடா மூலம்
வண்ணக்காவியம் வாழ்வில் படைக்க
அந்த புள்ளிதானடா நீயும் நானும்...

குறிக்கோள் ஒன்றை குறியாய் வைத்து
புதிய தாஜ்மஹால் கட்டிவிடு...
தந்திரம் செய்யும் நரியினைக் கண்டால்
மந்திரக்கோலால் சண்டையிடு...

மீனை பிடிக்கும் தூண்டில்போல
முயற்சி கடலுக்குள்ளே மூழ்கிடு...
வீறுகொண்டு எழுந்திடும் விதைப்போல்
உன் தலையைத்தூக்கி புதுஉலகைப் பார்த்திடு...

அறிவு என்னும் தீயை மூட்டு
அறியாமை என்னும் இருளை பொசுக்கு...
இலக்கு என்னும் விளக்கை ஏற்று
இருட்டு என்னும் திரையை விலக்கு...

இலட்சியத்தை தூக்கி எடு
அலட்சியத்தை தூக்கிலிடு...
மனக்கூர்மை என்னும் வாளை தீட்டு
புதிய இளைஞன் என்ற வாலை காட்டு....!

எழுதியவர் : நாகூர் கவி (19-Oct-14, 11:03 pm)
பார்வை : 694

மேலே