என்ன செய்வாய் நீ

நம்மிரு குடும்பங்களுக்கிடையே
பத்தும் பொருந்தி வருகிறதாம்

வாங்கிய பட்டங்களும்
சேர்ந்து கொண்டது

எட்டுக்கு ஒரு உறவுள்ளதாம்
தடுக்கி விழுந்தால் மடி ஏந்திக்கொள்ள

என்னைப் போல் தெரிகிறாள்
உன் அத்தை
அன்பொழுகப் பேசுகிறார்
அவன் தந்தை
உனக்குப் பிடித்த
பிச்சிப் பூவிற்குப் பஞ்சமில்லை அங்கே

பிணக்குகளுக்கும் வழியில்லை
நீ வாழப் போவதோ வெளிநாட்டில் என்று
ஆளாளுக்கு அவரவருக்கு பிடித்தமானதை
என்னில் ஏற்ற முயல
சேர்ந்து வாழப் போகும்
நம்மிருவரைப் பற்றி
சிந்திக்க நேரமில்லை அவர்களுக்கு

வெளி சாயங்கள்
தொலைந்து போன
வெள்ளொளிப் பொழுதொன்றில்
நீ வினவலாம்
ஏன் தோற்றுப் போனாய் என்று
இல்லை, நான் மருகலாம்
எதற்காக என்னை இழந்தேனென

அன்று ,
இதே அனைவரும்
பேசிக்கொண்டிருப்பர்
அவரவர்க்கு பிடித்ததை
வேறிடத்திலிருந்து கடன் வாங்கியாவது
நிச்சயமாய் நம்மைப் பற்றி அல்ல !

உன் பெற்றோர் உன்னுடன்
உறவுகள் தொடர்ந்திடும் வீடு
உனக்குப் பிடித்த அதே வேலை
எல்லாம் அதே..
புதிதாய் நான் மட்டுமே
எனக்கு உன்னையும் சேர்த்து
எல்லாமே புதிதாய் ...
எனக்காக உன்னை
மாறச் சொல்லவில்லை
எங்கிருந்தாலும் நான் மட்டும்
நானாக இருக்க வேண்டுவதில்
தவறேதும் இல்லையே

கருங்கல்லில்
செதுக்கவில்லை இதயத்தை
களிமண் பாவையுமல்ல
இவள் !

பெண் மனம் புரிந்தால்
காதல் செய்
இல்லையேல் கைவிட்டுவிடு
இந்நாடகத்தை !!

உயிரை உருவி
பந்தம் கட்டும்
கண்காட்சிகளில் ஒன்றாவது
குறையட்டும்!!!

எழுதியவர் : கார்த்திகா AK (20-Oct-14, 12:15 am)
Tanglish : yenna seivaai nee
பார்வை : 435

மேலே