கனவுகள் மெய்ப்படவேண்டும்

மனதின் காயம் மறைகிறது..
மனித நேயம் மலர்கிறது..

சுமைகளும் சுகங்களாக ,
சோகங்களோ
நகரும் மழைமேகங்கலாகிறது ..

வறுமைதன் வலிமை இழக்கிறது
வளமை புதுவழியில் பிறக்கிறது ..

சாதி, மத பேதமெலாம் புதைகிறது ..
சமத்துவம்
மண்ணோடும், மனதோடும் பூக்கிறது..

மகாகவியின் கனவுகள் நிஜமாக
பள்ளிகளில் சாதி சான்றிதழின்
வேண்டுதல் நிழலாகிறது...

ஆண் , பெண் பேதமோ நிறம்மாற,
அன்பே வேதமாய் உருமாற,
திருநங்கைகளும் நம்மோடு ஒன்றாக நடைபோட,
புதுவாசல் இங்கே
திறக்கிறது..

எம்மதமும் சம்மதமாச்சு ..
மனம் இங்கே ஒன்றாகி போச்சு...
உலகின் மொழிகள்
பலவென்றாயினும் , அன்பே
வாழ்வின் மொழியாக ஆச்சு...

உயர்ந்தவன் , தாழ்ந்தவன்
வேறுபாடில்லை - இனி
வீதியோரம் வாழும் பாடில்லை...

ஓடி, ஓடி உழைப்போர் இங்கில்லை
ஓயாத நாட்களும் இனியில்லை...

ஓய்வுக்கு இங்கே வழியுண்டு - வாழ்வில்
தொய்வு பெற்றோரும்
நம்மை பெற்ற பெற்றோரும்
வாழ, என்றுமே வழியுண்டு ..

முதியோர் இல்லங்கள்
இல்லாமல் ஆனது ..
நல்ல உள்ளங்களால்
நாடிங்கே செழிக்குது...

நள்ளிரவிலே,
பெண்மகள் தனியாக,
நடந்துபோகிறாள் நலமாக..
சமூகம் மாறியது,
புதிய சமுதாயம்
மலர்கிறது..
மகாத்மாவின் கனவும் ஈடேறியது..

இந்தியா- பாகிஸ்தான்
பிரிவில்லை!!
பாரினில் எந்நாளும் இனி
போரில்லை ..

ராணுவமும் , காவலும்
தேவை இல்லை ..
நீ, நான்
உனக்கு, எனக்கு
என்பதே நம்
தேவையில் இல்லை ..

சாலை விபத்தில்
உயிர்போகும் அபாயமில்லை!!.
அவசர சேவைகளை
அழைக்கத் தேவை இல்லை..

அதிநவீன ஆடம்பரம்
அழிந்து போனது!
அழகிய பண்பாடு
அமைதி தந்தது ..

கடலின் சீற்றம் தணிந்து போகிறது
புயல் காற்றும் பணிந்து போகிறது
இயற்கை பசுமையாய்
மலர்ந்து வருகிறது ,,
மழைத்துளி சுகமாய்
மண்ணை வருடுகிறது..
எதிர்கால மழலையும்
வாழ்வை ரசிக்கிறது.

விண்ணைப் பிளக்கும்
வெடிகளின் சத்தமும் -வலியால்
விழிகளை நனைக்கும் நீரின் ஈரமும்
செத்துப் போனது...

இளைஞர்களே !
கனவு காணுங்கள்
உங்கள் கனவுகள்
பெரியதாய் இருக்கட்டும்
என்று கூறிய
"கலாம்" அவர்களின்
வார்த்தைகளாலே
நானும் காண்கிறேன்
இத்தகைய கனவுகளை..

தினம் ,தினம்
வேண்டுகிறேன் இறைவனிடம்
காலம் வசப்பட வேண்டும்
என் "கனவுகள் மெய்ப்பட வேண்டும் "என்று...


சீ.கவிதா
முதுகலை உளவியல் முதலாம் ஆண்டு
அரசு கலைக் கல்லூரி , கோவை .

எழுதியவர் : கவிதா (21-Oct-14, 7:16 pm)
பார்வை : 167

மேலே