தேடியும் விளங்கா அர்த்தமா நீ

நீ யார்?

இருக்கிறாயா
இல்லையா
உண்மையா
பொய்யா

நீ யார்?

புராணமா
புனைகதையா
நம்பிக்கையா
மூடத்தன்மையா

நீ யார்?

ஆற்றலா
அறியாமையா
அருளா - வெறும்
ஆவேசமா

நீ யார்?

கேள்வியாக நீ
எழக் காரணமென்ன
பதில் தேடிச்சென்றவர் - தானே
உன் தோன்றலென
பிதற்றுவதேன்?

நீ யார்?

இறைவனென்றால் தெய்வம்
தெய்வமென்றால் கடவுள்
அதென்றால் இது
இதென்றால் அது

அகராதிகள் அத்தனையும்
மாற்றுப்பெயர் சொல்கிறதேயொழிய
மறுமொழி கூறுவதில்லை

இதுவுமின்றி
அதுவுமின்றி
எதுவுமாயில்லாத உனை - சிலர்
எங்கும் இருப்பதாய் சொல்கின்றனரே

விளங்கியதென
ஆசுவாசப்படுகையில்
விடையிலிருந்து மீண்டும்
விளையும் வினாவாகின்ற

நீ யார்?

ஆத்திகனோ
நாத்திகனோ
அரசாளுமி னமோ
அடிமைக் குடியோ - அனைவராலும்
அன்றாடம் பேசப்படும்

நீ யார்?

மனதில் கேள்வியாகி
குழப்பத்தில் கருவாகி
கவிதையாகிப்போன
இந்த "நீ" என்ற

"நீ" தான் யார்?

கைதட்டல் வாங்க
காசுபிடுங்க
காவியிலே கபடமாட
கன்னியர் கற்புதனை சூறையாட
கையாளப்படும் ஒருகாரணமே

நீ யார்?

இந்த
மானிடரின் செயலுக்கெல்லாம்
பலியாகிக் கொண்டிருக்கும்
பரிதாபமே

நீ யார்?

எழுதியவர் : யாழ்மொழி (23-Oct-14, 12:37 pm)
பார்வை : 153

மேலே