தமிழ் கவிதை
தமிழ் தந்ததே எனக்குள் எழுத்து !
எழுத்துக்கள் கோர்த்து கவிதை
எழுதித்தான் பார்ப்போமே !!
உணர்வுகள் எழுந்தன எழுத்துடன் சொற்களாய்
சொற்கள் அழுந்தி,ஏறி, வந்தன வரிகள்
கவிதையோ...?! வரட்டும் வரட்டும் !!
எண்ணங்கள் ஆங்காங்கே தீயின் பொறிகளாய் !
ஏக்கங்கள் ஆங்காங்கே தெளித்த(கண்)நீர் துளிகளாய் !
அஹா.. கவிதைதான் ! புரிகிறது..புரிகிறது..
வார்த்தைகள் கோர்த்து..
மடித்து, மடக்கி வரிகளாக்கி..
விரைவிலே ஒரு கவிதை வந்தே விட்டது..!
மறுபடி படித்தேன். அடடா விட்டேனே !
உவமை எதுவும் சொல்ல எப்படி நான் மறந்தேன்?
விடுவேனா??
" என் மன ஓட்டங்கள்..
வெடிக்கும் மின்னலோ, வேகமாய் நகரும் மேகமோ அல்ல..
விரிந்து கிடக்கும் வானம்.. ! "
என்னையே தட்டிக்கொண்டு படித்தேன் மறுமுறை..
கவிதையேதான் !!
அர்த்தம் இருக்கிறதே
அனைவர்க்கும் புரிகிறதே !
இருந்தும் ஏதோ இல்லை என
எனக்குள்ளே தெரிகிறது!
தேடல் இருப்பவர்க்கு
இருக்கின்ற இயல்பிதுதான்!
இயல்பதுவோ??..
இல்லாதது இயல்பதுவோ??!
உணர்ந்தேன்...!
கவிதையிலே இல்லாதது
"இயல்பு" தான்!
தமிழ் தெரிந்தாலே வருவதல்ல கவிதை..
தமிழுணர்ந்து சுவையேற்றிய வரிகள்
மட்டுமே சொல்வதல்ல கவிதை.. !
உள்ளே கொப்பளிக்கும்
உணர்வுகள் இயல்பாக
வெள்ளம் நிகரெனவே
வெளிப்படுதல் கவிதை!
உணர்வது மேலோங்கி,
வரிகளின் அருவியாதல் கவிதை!
மொழிகள் பலகடந்து, மௌனங்கள் சிலநுழைந்து
பள்ளம் சிலபதுங்கி, பாசத்தில் சிலகுழைந்து,
பாறைகள் மோதி சினவெறிகொண்டு தெறித்து.. பல
ஆறெனவே பரபரப்பாய் வெளிகள் ஓடி..
இயல்பாய் பாய்ந்து..
இறுதியில் அமைதியாய்...
படிப்பவர் உள்ளத்துள்
கடலென கலப்பதன்றோ கவிதை??
கடலென கலப்பதுதான் கவிதை..