காதல் புஸ்வானம்
என் நியூரான்களின்
செத்துப்போகாத செல்களில்
நீக்கமற நிறைந்திருக்கும்
நீயே என் 'கன்னி'வெடி!
நினைவுகளின் பிஞ்சுவிரல்
சுற்றிச் சுழற்றியதால்
என் கூரைமுழுதும்
சிதறி மிளிருகிறது....
உன் சிரிப்பு மத்தாப்பு!
நீ பிரியம் உதிர்த்த நாட்களைப்
பற்றவைக்காமலேயே
சுற்றி வருகிறது....
மனச் சங்குசக்கரம்!
கைபேசியில் பொதிந்திருக்கும்
குறுஞ்செய்தியில் கருத்து குவிய,
மார்பில் குத்துகிறது....
எப்போதோ ஏவப்பட்ட
வார்த்தை ராக்கெட்!
நட்பு- நேசம்;
அன்பு- ஆராதனை;
காதல்;- காமம்...என
என் இதயஇலை முழுதும்
இதமாய்ப் பரிமாறினாய்....
காதல்ப் பலகாரம்!
முளைத்து- மரித்து-
மீண்டும்
துளிர்த்ததொரு நேசத்தில்
மாறிமாறி எறிந்துகொண்டோம்...
ஆணவ அணுகுண்டுகளை!
டம்! டமா..ல்! டுமீல்!
எல்லாச் சத்தத்திற்கும் மத்தியில்
எனக்கு மட்டும் கேட்கிறது...
கடைசியாய் நீ தந்த
முத்தச்சத்தம்!
இனி
ஒருபோதும்
சந்தித்துக்கொள்ளப் போவதில்லை....
உனது தீபாவளியும்
எனது தீபாவளியும்!