காதல் பரிசு
கருமேகத்தில் இழைத்த
சந்தனம் - அவன்
காற்றினும் இனிய
மெல்லினம்
கண்களின் பார்வையில்
கணிவொழுகும் - அந்தக்
காளையின் வரவில்
சுகம் பெருகும்
சதைபோட்ட உடலும்
சாய்கின்ற நடையும்
நகைகொண்ட முகமும்
நாணம்தரும் கர்வமும்
தவறொன்று கண்டால்
தெரிக்கின்றக் கனலும்
தலையாட்ட வைக்கும்
தரமான தீர்ப்பும்
பொறுப்பென்ற சொல்லுக்கு
பொருந்திவிட்ட குணமும்
வருமையெனக் கேட்டால்
வழங்கிவிடும் மனமும்
பெருமைக்கும் புகழுக்கும்
பிடிகொடுக்கா திமிரும்
பெண்ணிவளைக் கவராமல்
வேறென்ன செய்யும்?
காதலுக்கு மட்டுமன்றி
கண்ணியத்திற்கும்
நாயகனா யிருக்கும் - என்
நவமணியே!
சீதனத்தில் செழிக்க எண்ணா
செங்கதிரே - உனை
சேர்ந்திடும் வரமென்றால்
கசந்திடுமோ?
உயிரானவனே!
உனக்கென
உனக்கெனவே - பல
கனவுகள் எனக்குள்ளும் உண்டு
வட்டமிட்டு எரிகின்ற
சூழ்நிலைத்தீயை - நல்ல
திட்டத்தினால் அணைத்துவிட்டு
பதில் சொல்கிறேன்
இந்த ஏழைக்காக
காத்திருக்கும் - காதல்
எஜமானரே
காத்திருப்பின் வலியதை
நானுமறிவேன் - நின்
காதலுக்கு பரிசொன்று
விரைவில் தருவேன்...!