நீ நிறைத்த பொறிக்கித்தனங்களில் கொஞ்சம்
நீ நிறைத்த பொறிக்கித்தனங்களில் கொஞ்சம்
==========================================
கவிதை என்றாலே காதல்தானா
என்று சிரிக்கிறது
கோர்க்க எத்தனிக்கும்
எப்பொழுதும்
மேசையில் மீள்ம இணைவியால்
கைதுசெய்யப்பட்டிருந்த
அந்த நெகிழி மீன் பொம்மைகள்
நிசமாக ஒன்று சொல்லட்டுமா என்று
ஆரம்பிக்கும் முன்னமே
கலகலவென்று சிரித்துத் தொடங்கும்
என் அனர்த்தங்களுக்குள்
வயதிற்கில்லாத மிடல்களினிடையிலும்
சொகுசு கொடுக்கின்ற
பதம் தெய்ப்பான் நீதானே
எனும் இளக்காரங்களுக்கு முன்னாலே
தடவலித்துக்கொண்டே
என்னுள் தொத்துவியாதியாகிவிட்ட
அன்றைய
உன் மென்பட்டு அளவல்கள்
என் வெட்கத்திடர் உடைத்ததை அறிவாயா
எனக்காக மட்டுமே தரப்போகிறாய்
என்ற உன் நேரங்களுடன்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்
உதிர்வேந்திடா தளிரவையம்
உன் துணை தேடும் நிசப்தங்களுடன்
படலைத்தொடுக்கும் என் விரல்களையும்
இராத்தல் மெலியும்
மைலாஞ்சி இராவுதல்களையும்
ஒரு காரணமாக்கி
உனை தொலைவாக்கும்
வேனல் பிடாரித்தனங்களை
முடிந்தபோதெல்லாம் கொடுத்துப்போனாலும்
தேடவே செய்கிறது
உன்னை மறக்கிறேன் என
புறம் துப்பிப்போகும்
நீ நிறைத்த பொறிக்கித்தனங்களில் கொஞ்சத்தை
சடம் மற்றும் தங்கி
குடல் உரிக்கும் உன்னல்கள்
சேரா கொய்தல்களினால் நாணி
இடர் கொடுக்கும் அரும்படரால்
மெரசல் கொள்கிறேன் நீ அற்ற இன்னாழிகைகளில்
என் கண்ணீர் விழுங்கிய
பெயரறியா அந் நதிக்கரையொன்றில்
கால்களை குழைந்தவண்ணம்
யார் யாரோ எழுதிவிட்ட புகார்களுடன்
எழுதிய என் புகாரும்
போட்டியிட்டு மோதிப்போகிறதை
வாயடைத்தப்படியே விசும்பிக்கொண்டு
நோட்டமிடுகிறேன்
நீயோ பழம் தின்ற விதைகளை எண்ணியவனாய்
பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்
அடுத்தப்பறிப்பிற்கான
உன் மரம் தேடல்சுவடுகளிலெல்லாம்
உன்னால்
பாழ்பட்டுப்போன நானே
உனக்கு முன்னால் சென்று, மரணித்து
மீண்டும் மரமாகி
பூவாகி காயாகி பழமாகிறேன்
எனை மட்டும் உண்டு
என் விதைகளையே எண்ணிக்கொண்டிரு
ம்ம்ம்ம் ,, இது என் சாபந்தான்
இதையே என் வரமுமாகவும் ஏற்றுவிடுகிறேனே
அனுசரன்