சினிமாக்காரன் - கே-எஸ்-கலை
திரை செய்து
மனம் கெட்டான்
நரை கண்டும்
குணம் கெட்டான்
தரை தவழும் பூ மீதும்
தப்பெண்ணம்
படர விட்டான் !
சோலை போலே
கலையிருக்க
சேலைக்குள்ளே
கதை வைத்தான் !
வாழ வைக்கும்
தமிழ் முகத்தில்
நீல அமிலம்
ஊற்றி வைத்தான் !.
இசை கடித்து
காதெல்லாம்
ரத்தம் வழிய வழிசெய்தான் !
கதை கடித்து
நெஞ்செல்லாம்
புத்தம் புதிய வலிசெய்தான் !
வெள்ளாவி
அவித்தது போல
வெண் மகளிர்
உரித்து வைத்தான் !
கொட்டாவி
கூட இங்கு
ஆங்கிலத்தில்
விட்டு போனான் !
வன்முறைகள்
படிப்பித்தான் !
வரைமுறைகள்
தகர்ப்பித்தான் !
அம்மணமாய்
ஆட வைத்தான்
அத்தனையும்
கலை என்றான்
கலைமகளை விலங்கிட்டு
விலைமகளாய்
கூட்டிப் போனான் !
ஹாலிவூடு
போல நாங்கள்
ஆக வேண்டும்
என்றுரைத்தான்
கோலிவூட்டை
காலி வீ டாய் ஆக்கிவிட்டு
காசு தின்று
ஏப்பம் விட்டான் !
வாழ வைத்தான்
ஆள வைத்தான்
தமிழ் தாய்க்கு
வாய்க்கரிசி போட வைத்தான் !
ஆட வைத்தான்
பாட வைத்தான்
தவிக்கும் வாய்க்கு
நீர்கேட்டு வாட வைத்தான் !
மூத்த மொழி !
மூத்த மொழி !
மேடையேறிச் சூளுரைத்தான்!
காசு பணம்
ஆசை வைத்தான் !
மாசு குணம்
மனம் வைத்தான் !
மூத்த மொழி தள்ளாடி
பாடையேறிப் போக வைத்தான் !
----------------------------------------------சினிமாக்காரன் !