அபித்தீவு வாருங்கள்

யாருமில்லா தீவுக்குள்
அகப்பட்ட மாலுமி போல்
உடைந்து போன கப்பலுடன்
ஒற்றையிலே தவிப்பவன் நான்

பிரபஞ்சப் பெருவெளியில்
பெரியதிலும் சிறியதிலும்
நிறைந்திருந்து குறைந்திருந்து
நிற்குமந்தக் கடவுளைப்போல்

காகிதமும் பேனாவும்
கைவசத்தில் நிறையஉண்டு
படைத்திடும் பரந்தஉள்ளம்
உடலுக்குள் ஒன்று உண்டு...

எண்ணமெல்லாம் தமிழிருக்கு
உயிருக்குள் ஒளியிருக்கு
கவிதைக்குள் உயிர்வைக்கும்
கலையதுவும் வசமிருக்கு

தனிமையினை பொசுக்கிவிட
தாளம்போடும் நாவிருக்கு
பசிதூக்கம் போக்கிடவே
பரந்த ஒரு நிலமிருக்கு

பாட்டுக்கு தலையாட்ட
பத்துநூறு மரமிருக்கு
அப்பப்போ கைதட்ட
கரைசேரும் அலையிருக்கு

விளக்காக நிலவிருக்கு
குளிர்கொடுக்க காற்றிருக்கு
விலங்குகளும் ஒன்றிரண்டு
வழித்துணையாய் இங்கிருக்கு

காலையிலே எழுப்பிவிட
கத்தும் சிலகுயிலிருக்கு
மாலையிலே மனம்நிரப்ப
மனசிருக்கும் நினைவிருக்கு

இரவெல்லாம் இதமாக்க
இறைவனைநான் அழைத்திங்கு
உறவாக கவிசொல்லி
காதலிக்க வழியிருக்கு

தூரத்தில் எங்கேயோ
வாழ்க்கையினை தொலைத்துவிட்டு
பாரத்தைத் தாங்காமல்
பரிதவிக்கும் மனிதர்களே

வாருங்கள் அபித்தீவு !
வழிதொலைத்தால் வந்திடலாம்
பாதைசொல்லத் தெரியவில்லை
பாதியிலே குழம்பிடுவேன்

அரசாள வேந்தரில்லை
அரசியலின் அழுக்குஇல்லை
மதம்பற்றிக் கவலையில்லை
மனம்மட்டும் வேண்டுமிங்கு!

எழுதியவர் : அபி (26-Oct-14, 11:35 am)
Tanglish : aan
பார்வை : 107

மேலே