மீள் வலி
சின்ன வயதினிலே
சித்திரம் வடித்தேன்
என் மனதில் என்
அத்தான் முகத்தை..!
மின் ஒளி போல்
என் மனக்கண்
ஒளி கொண்டு
வெளிச்சம்
கொடுப்பேன்
தினமும்..!!
அவர் வந்து
நின்றவுடன்
ஏதேதோ பேசத்
தோன்றும் இதழ்
துடிக்கும் மொழி
பறக்காமல் அடங்கி
விடும் உள்ளே..!!
ஒரு நாள் புன்னகை
பார்த்தேன் மோகனப்
புன்னகையென
நினைத்தேன்..!!
செந்தமிழ் கொண்டு
கவி வடித்தேன் உடனே
சிரிப்பாலே என்னை
மயங்க வைத்து
சிந்தனையில்
என்னை மந்தையாக்கிய
மன்னவனே என்று வடித்த
கவியை படித்து ரசித்தேன்..!
என் காதல் நாடகம்
மனதின் உள்ளே
அரங்கேற்றம் காண
நான் ஊமையாக
இருந்தேன்..!!
என் உள்ளம் அறிய
அத்தான் அறிமுகப்
படுத்தினான்
இன்னொருத்தியை..!!
இமய மலையில்
இருந்து கீழே விழுந்தேன்
சிந்தனையில் கள்ளம்
இல்லா அவள் சிரிப்பை
பார்த்துக் கடும் கோபம்
கொண்டேன் என்
மனதில்..!!
காதல் நெருப்பில்
நான் வெந்து
துடிக்கையில்
அம்மா அண்ணன்
மகன் விருந்துக்காக
விறகு அடுப்பில்
வெந்து சமைக்கிறார்...!!
நான் உள்ளே அழுகின்றேன்
என் வீட்டுச் சிரிப்பு ஒளியோ
அடுத்த தெருவை நோக்கி
போகின்றது..!!
காதலைப் போட்டு
பூட்டிய சாவியைப்
போட்டு விட்டேன்
அடிமனதில் என்
அப்பா கை காட்டிய
பாதையை நோக்கி
வந்து விட்டேன்
நெடும் தூரம்..!!
வாழ்க்கைப் பாதையில்
பாதி வரை வந்த பின்
என் முதல் காதல் இன்று
கண் விழித்தது ஏனோ..!!
அத்தான் நீட்டி நிமிர்ந்து
பெட்டியில் படுத்திருப்பதைப்
பார்த்தா இல்லை அவர்
மனைவி அருகில் இருப்பதை
பார்த்து இன்னும் பொறாமை
கொண்டா...!!
அவர் இறந்த பின்னும்
என் உண்மைக் காதல்
இறக்க வில்லை என்று
இன்றுதான் உணர்ந்தேன்
நான் உள்ளே அழுகின்றேன்
அத்தான் இறப்புக்காக மட்டும்
இல்லை என் காதல் விழித்ததை
நினைத்தும்..!!