மனிதநேய மன்னன்

மனிதநேய மன்னன்
பாவலர் கருமலைத்தமிழாழன்
மன்னனவன் வேட்டைக்கு அமைச்ச ரோடு
மற்றும்பல் வீரரினை அழைத்துக் கொண்டு
தன்னுடைய குதிரையிலே அமர்ந்த வாறு
தலைநிமிர்ந்தே காட்டிற்குள் நுழைந்து சென்றார்
முன்புறத்தே விலங்குகளைப் பார்த்த வாறு
முடிவேந்தன் முன்னேறிச் செல்லும் போது
கன்னத்தின் மீதொருகல் பறந்து வந்து
கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்த தங்கே !
அதிர்ந்திட்ட வீரர்கள் சுற்று முற்றும்
அந்தக்கல் எங்கிருந்து வந்த தென்று
புதிரான நெஞ்சமுடன் தேடிப் பார்க்கப்
புதர்களுக்கு நடுவினிலே வயதில் மூத்த
முதியவளோ நடுங்குகின்ற தோற்றத் தோடு
முன்பின்னே பார்த்தவாறு நின்றி ருந்தாள்
அதிவிரைவில் பிடித்தவளை இழுத்து வந்தே
அரசன்முன் நிறுத்தினார்கள் வீரர் கள்தாம் !
தளர்ந்தவுடல் மூதாட்டி தம்மைப் பார்த்துத்
தணிவான குரலினிலே எதற்க டித்தாய்
களம்காணும் மன்னனையே கல்லால் என்றார் !
கண்கனிலே அச்சமுடன் மன்னா எந்த
வளமில்லா ஏழையென்றன் பசியைப் போக்க
வளர்ந்தமரப் பழம்வீழ்த்த அடித்த கல்லோ
அளவுமாறிக் குறிதவறி விழுந்த தென்றே
அடிபணிந்து மன்னிப்பு கேட்டு நின்றாள் !
பக்கத்தில் நின்றிருந்த அமைச்சர் தம்மைப்
பார்வையிலே அருகழைத்து மூதாட் டிக்கே
தக்கபடி துணிமணிகள் தானி யங்கள்
தங்கக்கா சாயிரமும் தருக வென்றே
திக்கெட்டும் புகழ்மன்னன் வாயால் கூறத்
திடுக்கிட்ட அமைச்சர்தாம் ஐயத் தோடு
தக்கதொரு தண்டனையைத் தராமல் கல்லால்
தாக்கியதைப் போற்றுவதோ என்றே கேட்டார் !
கல்லெறிந்த கரங்களுக்கு நாசு வைக்கும்
கனிகளினை ஓரறிவு மரமே தந்து
நல்லதொரு காட்டாக நிற்கும் போது
நாடாளும் ஆறறிவு மன்னன் நானோ
அல்லலுறும் மூதாட்டி வறுமை போக்க
அதிகமாகத் தருவதுதான் பெருமை என்றார் !
சொல்கேட்டே அனைவருமே மனித நேயம்
சொரிந்துநின்ற மன்னனையே போற்றி நின்றார் !