கருத்தரிக்காமல் ஒரு பிரசவம் - சந்தோஷ்

உள்ளார்ந்த மனதில்
ஏதோ ஒரு தீ...!

எரிகிறது.. எரிகிறது
எரிந்துக்கொண்டே என்னை
எறிந்தே விட்டது
ஒரு தனிமை தீவில்...!


தீவு சுற்றிலும்
தண்ணீர் இருக்கிறது
நல்லவேளை -எந்த
மனிதருமில்லை.

மூளைக்குள் விரலைவிட்டேன்
அனல் வாட்டியது..!
சிந்தனையின் வெப்பமோ?
கற்பனையின் தனலோ?
அறியேன்...!
எதையோ எழுதவேண்டும்
இம்சையானது என் மனது..!

நிலாவை எழுதலாமா..? இல்லை
நிலாவிலே எழுதலாமா?
நட்சத்திரங்களை அழைத்து
வாசிக்க சொல்லாமா?

வானவில் மையெடுத்து
மேகத்தாளில்
கவிஒத்திகை செய்வோமா?
சூரியனை குளிரூட்ட
ஓசோன் ஓட்டைக்குள் புகுந்து
தமிழ்கவிதை தெளிப்போமா?

ஆழிக்குள் மூழ்கி
முத்துக்களை பொறுக்கி
முத்தமிழுக்கு
முத்துமாலை செய்வோமா?

சங்ககாலத்து புலவர்களின்
சடலங்களை தேடியெடுத்து
புதுக்கவிதை உயிர்க்கொடுத்து
ஹைக்கூ கவிதை கேட்போமா?

முப்பதுகளின் வயதில்
மாண்டுப்போன பாரதியை
மீட்டெடுத்து
விஞ்ஞான உயிரேற்றி
வீணாப்போகும் தமிழ்சமூகத்திற்கு
ஒரு சாட்டையடி கொடுப்போமா?

வினாதீ எரிந்துக்கொண்டேயிருக்கின்றன
விடைநீர் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.

அதுசரி...!
நான் இப்போது
என்ன செய்துக்கொண்டிருக்கிறேன். ?
ஏனிப்படி புலம்பிக்கொண்டிருக்கிறேன். ?

ஓ ! கரு’தரிக்காமல்
கவிதை பிரசவிக்கிறேன்..!

அய்யோ..!! அய்யோ..!!
நான் எப்போதுதான்
கவிதை எழுதப்போகிறேனோ???

----------------------------------------

-இரா -சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (28-Oct-14, 2:26 am)
பார்வை : 277

மேலே