இறக்கவில்லை
ஈரான் நாட்டு இளம் பெண்ணொருத்தி
அணைத்து முத்தமிட்டாள்
மூன்று நாட்களுக்கு முன் ..
தூக்குக் கயிற்றை!
ஐந்து ஆண்டுகள்
சிறையில் கழித்த பின்னே!
வயதோ இருபத்து ஆறு!..
தண்டனையின் காரணமோ..
மனம் கொதிக்கும் ..!
கயவன் ஒருவன் அவள் கற்புதனை
அழித்திட நெருங்கிய வேளையிலே
பேனா கத்தியினால் அவனை குத்தி
கொலை செய்து விட்டாள் என்று சொல்லி
நீதி தேவதை கண்களை கட்டினரே!
சாகப் போகுமுன் அவள் குரல் பதித்தாள்
பதிவு நாடாதனில் அவள் அன்றே..!
அவள் தாயிடம் பேசுவதாய் அமைந்த
அப்பதிவில் அவள் உரைக்கின்றாள்..
அம்மா..எனக்காக நீ அழ வேண்டாம்..
உயிர் அற்ற என் உடலை
மண்ணில் இட வேண்டாம்..
என் கல்லறையில் தினம் பூ வேண்டாம்..
கருப்பு துணி கட்டி நீ வர வேண்டாம்..
மண்ணாய்ப் போகும் என்னுடலின்
உறுப்புகளில் உபயோகமானவை
அத்தனையும் அளித்திடு கொடையாய் நீ..
என்றாள்.. உறுப்புகள்
பெறுபவர் என் பெயர் அறிய வேண்டாம்..
என்றும் சொல்லி..
நீதியை கொன்றவர் அவராலும்
என்னைக் கொல்ல இயலாது என்றாள்!
(தூக்கு தண்டனை கைதியின் கடைசிக் குரல் வெளியிடப் பட்டது பற்றிய செய்தி வந்தது சமீபத்தில் TOI நாளிதழில்!)