மண்சரிவு
பசுத்தோலைப் போர்த்தும் புலியாக நின்றே
விசுவாசி வாழ்வை விளையாட -கொஸ்லாந்தைச்
சென்றக் கொடுங்காலன் மண்சரித்து மாச்சதியாய்.
கொன்றழித்தக் கோலம் பிழை.
பெண்ணோடு ஆணும் புதையுண்ட பொல்லாத
மண்சரிவைத் தோண்ட மனம்சரிந்து - கண்ணீர்
மழையால் கடல்பொங்க வைத்த இறைவன்
இழைத்த இயற்கைத் துயர்.
மழையால் செழிக்கும் மலைநாட்டு மண்ணில்
பிழைசெயதே பீத்தல் அணிவோன் - பிழைப்பிலே
மண்ணள்ளிப் போட்ட மழையே உனக்குமா
புண்ணாக்கிப் பார்க்கும் மனசு.
மண்ணில் புதைந்த மலைநாட்டா னுன்னாலே
கண்ணில் பெருக்கெடுக்கும் கங்கைபோல் -கண்ணீர்
வழிந்தோடக் காரணம் நீசெய்தே வாழ்க்கை
எழில்சிதைத்தாய் மண்ணாய் சரிந்து.
பெற்றோர் இழந்தாங்கு பிள்ளை பரிதவிக்க
உற்றார் மடிந்து உறவுகள் -சுற்றம்
கதறி அழவிட்ட காலநிலை உன்னால்
பதறித் துடிக்கிறோமே நாம்.
குடியிருந்தோர் வாழ்வைக் குடித்திட்டக் கோரம்
அடிவயிறுப் பற்றி எரித்து -நொடிக்குள்
இடிவீழ்ந்த துன்பம் எனவான செய்தி
விடிவான் இருண்ட வியப்பு.
தோண்டும் இடமெங்கும் தூங்கா நிலவாக
மாண்டு மடிந்தோர் மலர்முகங்கள்: -நீண்ட
லயமேன்னும் வீட்டுத் தொகுதிவாழ் மக்கள்
பயந்தழல் வேதனை பார்.
அனர்த்தத்தின் முகாம் அடைக்களம் கொண்டு
உணர்த்த முடியாத சோகத்தால் - திணறும்
இழப்புற்ற மக்கள் இடர்நீக்கக் காலச்
சுழற்சியே என்செய்வாய் சொல்?
*மெய்யன் நடராஜ்