காதலும் கலையும் ருசியோடு
சிதறாமல் சேர்த்தெடுத்த
பாசி பருப்பு குவியல்
நீராவியில் நேர்த்தியாய்
குளியல் போட்டு கொண்டிருக்கிறது..
மணம் வீசி மனதை மயக்கும்
நெய்யோடு அங்கே
முந்திரியும் திராட்சையும்
விவரமாய் ஒப்பந்தம் போடுகின்றது..
வெள்ளை அழகாய்
உள்ளம் கொள்ளை கொள்கிறது
பாத்திரம் நிறைய
நிரம்பி வழியும் தேங்காய் பால்..
என்னை மறந்து விட்டாயே
என செல்ல கோபம் காட்டுகிறது
தித்திப்பாய் திகைக்க வைக்கும்
வெல்ல பாகு..
தேன் கூட தோற்று விடும்
அழகு உனக்கு
என்று தேறுதல் கூறி
மலைத்து நின்றேன் அருகில் நான்..
மழைக்காலம் ஒன்றின்
சுகமான மாலை வேளையில்
மனம் கிறங்கி இசை கேட்கும்
சின்னதொரு இடைவெளியில்
என் கை வண்ணத்தில்
கண் முன்னே உருவானது
அந்த பருப்பு பாயசம்..
ஆஹா..
சமைப்பது தான்
என்னவொரு திருப்தி தருகின்றது..!!
சமையல் ஒன்றும்
சோர்ந்து போக செய்யும்
சாதாரண ஆபீஸ் வேலை அல்ல..
ரசனையும் அழகியலும்
ஒன்றாய் இணைத்து..
அன்பும் அக்கறையும் அதிலே தூவி..
சிறுக சிறுக
வார்த்து எடுக்கப்படும் சமையல்..
ஒரு கலை..
ஓராயிரம் அர்த்தம் சொல்லும்
ஓவியம் படைக்கும்
கலைஞன் மட்டும் அல்ல..
பேசாத பாறைக்கு
புதிதாய் உயிர் கொடுக்கும்
சிற்பி மட்டும் அல்ல..
வாய்க்கு ருசியாய்
சமைக்க தெரிந்த பெண் கூட
சிறந்தவொரு கலைப்பொருளை
சாதாரணமாய் தந்து விட்டு போகிறாள்..
சற்றும் எதிர் பாராத
ஒரு அழகிய தருணத்தில்
முழு வேகத்தில்
அடித்து செல்லும்
காதலை போல
சில சமயம்
சமையலும்
அமைந்து விடுவது உண்டு..
சுடு தண்ணீர் வைப்பதை தவிர
வேறு எதற்காகவும்
அடுப்படி சென்றிராத
என் கல்லூரி தோழி
திருமணம் ஆன புதிதில்
மட்டன் குழம்பு
வைத்ததாய் சொன்னதும்
தீய்ந்து போனதாய்
நான் நினைத்த உள்ளி தீயல்
என் அப்பாவுக்கு பிடித்து போனதும்
அப்படி ஒரு அழகான விந்தையே..
ஏனோ தானோவென்று
காய்கள் வெட்டி
எடுத்தோம் கவிழ்த்தோம்
என்று குழம்பு வைக்கும்
பல நேரங்களில்
உணவின் சுவை
குறைந்து போவது ஒன்றும்
பெரிய ஆச்சர்யமில்லை..
நேசிக்கும் உறவுகளுக்காய்
பார்த்து பார்த்து
பக்குவமாய் பரிமாறப்படும்
தோசை கூட
பலரின்
விருப்ப உணவாய்
மாறி போவதும்
அத்தனை பெரிய அதிர்ச்சியில்லை..
எல்லாம்.. காதலோடு.. கலை நயத்தோடு..
ருசி கூட்டும் சமையலின்
மாபெரும் உலகில்
சிறகடித்து பறக்கும்
சின்னதொரு
பறவையின் சிறகே..