கால் ஒடிந்த காக்கை-கற்றுத் தந்த பாடம்
நான் காலை ஒரு எட்டு மணிக்கு மாடியில் ஏறித் துணித் துவைக்க சென்றேன். கையில் ஒரு பக்கெட் எடுத்து சென்றேன். நான் எடுத்து வருவதைப் பார்த்துக் கொண்டே ஒரு காக்கை என் மாடி சுவரில் வந்து அமர்ந்தது . நானும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் துணிகளை துவைத்து கொண்டே காக்கையையும் பார்த்து கொண்டே இருந்தேன் . காக்கையிடம் ஏதோ குறைகிறதே என அவற்றை நன்றாகப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது அதற்கு ஒரு கால் விரல்கள் ஒன்று கூட இல்லை. அவை மாடியை சுற்றி இங்கும் அங்கும் பறந்து சாய்வான சுவர்களில் அமரும்போது அவற்றால் சுவரைப் பற்றிப் பிடிக்க முடியாமல் சரிந்து சென்றது. பறவைகளுக்கு விரல்கள் எவ்வளவு முக்கியம். தூங்கும் போது பறவைகள் கால் விரல்களின் உதவியோடு தான் தூங்க முடியும். இரைகளை கால் விரல்களால் தான் தூக்க முடியும். இரைகளை கிழித்து உண்ண விரல்களின் உதவி மிக அவசியம். இதுபோல் இன்னும் பல தேவைகள் உள்ளது.இவைகளை நினைத்துப் பார்த்தேன். மிகவும் பரிதாபப் பட்டேன். மணிநேரமே மறந்து போனது. ஆனால் அந்தக் காக்கை என்னிடம் எதிர்ப்பார்த்தது என் பரிதாபத்தை அல்ல . என் உதவியை. அது தன் குறையை ஒரு நிமிடப் பொழுது கூட வெளிபடுத்தி சற்று ஓயவில்லை . சாதாரண காக்கையை போல்தான் இருந்தது. அப்போதுதான் புரிந்தது பரிதாபம் என்பது ஒரு முட்டாள் தனமானது. ஆனால் இன்று பிறரின் குறைவுகளை எண்ணி பரிதாபப் படுபவர்கள்தான் அதிகம் . அவைகளால் ஒரு பைசாவுக்கு பிரயோசம் இல்லை. உதவியற்ற பரிதாபம் வீணானது. உதவும் கரமே மேன்மையானது. பரிதாபம் பிறர் பசியை ஆற்றாது. பகிரும் குணமே ஆற்றும். பகிர்ந்து வாழ்வோம் காக்கையின் வழியில் ...........................