எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம்நான்கு -கவிஜி

ஜன்னல் கம்பிக்குள் முடிந்த அளவு முகத்தை புதைத்து, சாய்ந்திருக்கும் முகத்தின் பாக கண்ணை கொஞ்சம் பெரிதாக்கி வெளியே உலாவ விட்டு.. தண்டவாளத்தின் சிறு வளைவில்,தான் போய்க் கொண்டிருக்கும் ரயிலின் முகத்தை... கண்டு விட்ட சந்தோசத்தில், பட்டுத் தெறிக்கும் மழைத் துளிகளின் சலனம் கடந்த ஜென் நிலையை அடைந்த வேளாங்கண்ணி... அழுந்திய முகத்தோடு அழுத்தமாய் சிரித்தார்....
ரயிலோடு ஒரு பயணம் எப்போதுமே மனதை குலுக்கத்தான் செய்யும்....செய்தது..... அதுவும்.... மழையோடு ரயில் பயணம்.... சொல்ல முடியாத தூரங்களின் சொல்லிவிட்ட பூத் தூவல்.... அள்ள அள்ள குறையாத ஆழ் மன பால்யத்தை சின்ன சின்ன வளைவுகளில் சிக்கு புக்காய்... சில்லிட வைக்கும் அனுபவம்....
ஏதேதோ யோசிக்கத் தொடங்கிய மனதில்.... எதுவுமே இல்லாத யோசனைக்குள் அமிழ்ந்திருந்தது.. அவரின் மனது...
மனதின் நீட்சியை.... மனதறியும் போது.....
மனமே மனமே மயங்கிடு கணமே...
கணமே கணமே... கரைந்திடு... சினமே.....
சினமே சினமே... மறைந்திடு... தினமே.....
தினமே தினமே......வாழ்ந்திடு.... குணமே.....
குணமே குணமே..... சேர்ந்திடு.....வானமே....
வானம் போல வாழ்ந்து நிக்க
வாழ்க்கை ஆகும் பெருசாக
போக போக ஒண்ணுமில்ல...
புரிஞ்சுகிட்டா.......... மனமில்ல தரிசாக....
கடைசி வரியை முடிக்கும் சிந்தனையைக் கலைத்த குரல்,
"அங்கிள்..... என்ன பாக்கறீங்க...."-என்றது......
ஜன்னல் விட்ட முகத்தை எண்ணமிட்டது அந்த சிறுமியின் குரல்....
நொடியில்.... மழை மறந்த முகமாய்.. ரயில் மறந்த அகமாய்.... அந்த சிறுமியைக் கண்ட வேளாங்கண்ணி...."மாமா..... என்ன பாக்கறீங்கனு கேளுங்கடி செல்லம்" என்றார்..... புன்னைத்தபடியே...
புரியாத பாஷையைக் கண்ட புது மனிதனாய் அந்த குழந்தை சட்டென தன் புன்னகையை மறந்து, அங்கிளையும் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மம்மியையும் கண்டது...
மம்மி.... சிரித்துக் கொண்டே, தன் டாட்டரை அள்ளிக் கொஞ்சிக் கொண்டு, " அவளுக்கு தமிழ் வராது.... "-என்று மூக்கை சுழித்துக் கொண்டு இதழில் ஒரு வகை பெருமையைப் பூசிக்கொண்டு புருவம் சுருக்கிக் கூறினார்...
"ஏன் தமிழ் வராது... வரணுமே.... நீங்க தமிழ் தான....?" பட்டென கேட்டு விட்டார்...வேளாங்கண்ணி
"ஆமா.. மதுரை தான்... சொந்த ஊரு.... ஆனா இப்போ சென்னைல இருக்கோம்... படிக்கறது இங்கிலீஷ் மீடியம்... கூட சேர்ற குழந்தைங்க எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசுவாங்க.. அப்போ எப்டி தமிழ் வரும்.. அதுமில்லாம தமிழ்ல பேசி என்ன ஆகப் போகுது.. இங்கிலீஷ் இருந்தா உலகத்தையே என் புள்ள வித்துட்டு வந்துரும்ல...." மீண்டும் பெருமை.. மம்மியின் கண்களில் தாண்டவமாடியது...
வேளாங்கண்ணிக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே புலப்படவில்லை... தமிழே வேண்டாம் என்று ஒரு தமிழ் தாய் தன் குழந்தையை வைத்துக் கொண்டு கூறுகிறது... இதற்கு பின்னால் இருக்கும் கலாசாரம்.. பண்பாடு.. மொழிப் பற்று.. உணர்வு.. உணர்தல்.. உள் வாங்கல்... என்று எத்தனையோ இருக்கிறதே..... அதையெல்லாம் எங்கிருந்து ஆரம்பிப்பது..?- மனதுக்குள் தடக் தடக் சத்தம் பழைய பத்துக் காசை உராய்வது போல உராய்ந்து உறைந்து போகச் செய்ய....
"இல்லமா.... தமிழ் கத்துகிட்டு என்ன செய்யப் போறான்னு நீங்க கேக்கறது தப்பும்மா..."-மனம் தாங்காமல் மீண்டும் சொல்லி விட்டார்....
அந்த மம்மி.... சிரித்துக் கொண்டே... "என்ன சார் தப்பு..... பொட்டிக் கடையில இருந்து... பில் கேட்ஸ் கடை வரைக்கும்.. இங்கிலிஸ் இருந்தா தான் வேலை கிடைக்கும்.... தமிழ் தமிழ்னு நெஞ்ச நிமித்திகிட்டு நின்னா... கவுண்டம் பாளையத்தைக் கூட தாண்ட முடியாது....அப்புறம் பூவாக்கு என்ன பண்றது...? உலகம் எங்கயோ போய்டுச்சு... இன்னும் தமிழை முதுகுல சுமந்துகிட்டு நடந்தா வேகமா நடக்க முடியுமா...." தமிழ் கேட்க சுவை தான்.. சுவைக்க சுவை இல்லையே....?-சுருக்கென்று நறுக்கென்று சொல்லி விட்டார் மம்மி...
"எல்லாருக்கும் இருக்கும் நியாயமான, ஆனா தப்பான ஆதங்கம் இது... உங்களோடு முதல் வாக்கியமே தப்பும்மா... படிக்கறது வேலைக்காக இல்ல.. அறிவ வளத்துக்க..அது மூலமா அனுபவத்தை தேடிக்க, அது மூலமா பிழைப்ப தேடி உழைக்க.. அது மூலமா வாழ்வை அனுபவித்து சந்தோசமா வாழ.. இதுல இங்கிலிஷ்ல படிச்சாத் தான் அறிவாளின்னு நினைக்கறது, பேசறது எல்லாம்... அறியாமையின் உச்சம்... ஏன் தமிழ்ல படிச்ச யாருமே முன்னுக்கு போனது இல்லையா...? முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதல் விஞ்ஞானி அண்ணாதுரை வரை.....எத்தனை விஞ்ஞானிகள், எத்தனை அறிஞர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், தொழிற் நுட்ப வல்லுனர்கள்... ஆட்சியாளர்கள்.. இன்னும் இன்னும் பெரிய பெரிய இடத்துல தமிழ்ல படிச்சவங்க தான் இருக்காங்க.. உங்கள சொல்லி குத்தமில்ல.... எவனோ ஒருத்தன் அவன் சுய நலத்துக்காக கத்துகிட்ட, கத்துக் கொடுத்த இங்கிலிசை இன்னும் இழுத்து புடிச்சுகிட்டு... அதுல படிச்சாத் தான் வாழ்க்கைன்னு, உங்கள மாதிரி ஆளுங்கள் நம்ப வைச்சு, பிசினெஸ் பண்றாங்களே.... அவுங்கள தட்டி கேக்கணும்.. அவுங்க தர்ற கமிசனுக்குக்காக அரசு பள்ளிகள கொஞ்சம் கொஞ்சமா தாரை வாத்துட்டு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ஆடி கார்ல போறாங்களே அரசியல் தலைவர்கள், அவுங்கள கேக்கணும் ......படிப்ப வியாபாரமா மாத்தின பெருமை உலகளவுல நம்ம தான் சேரும்...... இலவசமா கிடைக்க வேண்டிய படிப்பும் மருத்துவமும் இங்க காசு குடுத்தாதான் கிடைக்குது.. உழைச்சு வாங்க வேண்டிய மிக்ஸியும் கிரைண்டரும் இங்க இலவசமா கிடைக்குது.... இதை விட கேவலமான செயல் உலகத்துல இருக்குமா....?"
"இப்போ எதுக்கு சார் இவ்ளோ டென்சன் ஆகரீங்க..."-கொஞ்சம் மிரட்சியுடன் மம்மி கேட்க...
"தமிழ்ல படிச்சு தொலைசிட்டேனே.. தமிழ படிச்சு தொலைச்சிட்டேன... என்ன பண்றதும்மா...நான் டென்சன் எல்லாம் ஆகல.... ஆதங்கம்.. அவ்ளோ தான்... இது நம்ம நாடு... தமிழ்,நம்ம மொழி.. நாம பேசலன்னா யாரு பேசுவா..? மொழியை பின்ன எப்டி காப்பாத்தறது..? எல்லாரும் இங்கிலீஷ் இங்கிலீஷ்னு ஓடிட்டா.. அப்புறம் அழிஞ்சு போன பல மொழிகள்ல தமிழும் சேர்ந்திடுமே....... உலகத்துல இருக்கற செம்மொழிகள்ல தமிழ் மொழியும் ஒண்ணு.. எவ்ளோ பெரிய பெருமை... "நான் கண்ட புலவர்களிலே வள்ளுவனைப் போல இளங்கோவைப் போல் வேறோர் புலவனைக் கண்டதில்லை" என்று கூறினானே நம் பாரதி... அவனுக்கும் ஆங்கிலம் தெரியும்... ஆனால் ஆங்கிலேயனிடமும் தமிழ் தெரியாதவரிடமும் மட்டும் தான் ஆங்கிலத்தில் பேசுவான். ஊர் முக்கு தேநீர் கடைல நின்னுகிட்டு பேசிட்டு இருக்க மாட்டான்......ஆங்கிலம் வேண்டானு சொல்லல. கத்துக்கோங்க.. எங்க தேவையோ அங்க பேசுங்க.. வீட்ல தமிழ்ல பேசுங்க.. அது இனிமை....தேன் வந்து பாயும் காதுக்குள்ள... ஆனா நம்ம பசங்க பேச்சை ஆரம்பிக்கும் போதே ஹாய், ஹலோ, ஹவ் யூ டாங்கறான்....... எங்க போய் முடியும் இந்த மொழியக் கொல்ற திட்டம் ....?....மனப்பாடம் பண்ணிப் பண்ணி . அதும் ஆங்கிலத்துல மனப் பாடம் பண்ணியே அடுத்த தலை முறையை குட்டிச் சுவர் ஆக்கின பெருமை நம்ம தலைமுறையைத்தா சாரும்....மொழிங்கறது வெறும் பேசற ஊடகம் இல்லை... அது உணர்வு சார்ந்த உணருதல்.. ஜீன் சார்ந்த வெளிப்பாடு.. எந்த ஒரு குழந்தை தன் தாய் மொழியில் படிக்கிதோ அந்த குழந்தை தன்னோட அறிவாற்றல்ல சிறந்து விளங்குதுன்னும், ஆங்கிலத்தைக் கூட தன்னோட மொழி வழியா படிக்கும் போது இலக்கண பிழை இல்லாமல் பேச எழுத முடியும்னு ஒரு ஆய்வு சொல்லுது.....அதனால் தமிழ் தெரியாதுங்கறத தயவு செஞ்சு பெருமையா சொல்லாதீங்க. தன் குழந்தைக்கு தமிழ் தெரியாதுங்கறது, தாயை தெரியாதுங்கறதுக்கு சமம்... அத மாத்துங்க.... தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கோங்க.". என்று சொல்லி விட்டு மீண்டும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.....அப்போது அவருக்கு அது தேவைப் பட்டதாகவும் இருந்தது...
கண நேரத்தில் அவர் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர.... தன் பெட்டியை தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார்...
கால் டாக்ஸி பிடித்தார்.... டாக்ஸி அவர் சொன்ன வழியை விட்டு, வேறு வழியில் சென்று கொண்டிருந்தது.... அதே முகமூடிப் புன்னகையில்....
சற்று நேரத்துக்கு முன்.....
மழை சாரல்..... மலை மீது .......
மனம் தூவும் மொழி யாதும்.... மழை பேசும் மலையாகும்.... மலை தாண்டும் மனமெங்கும்.... மலையாடும் மழையாகும்.....
பார்க்கும் இடமெல்லாம் வானமாகவே தெரிந்தது கிருத்திக்காவுக்கு.......
வானம் என்றொரு.. தேவதை...நிமிடம் ஒரு முகம் தரிக்கிறாள்.. நொடிக்கொரு உடல் கொள்கிறாள். நொடிக்கொரு உயிர் கொள்கிறாள்... தேட தேட ஒன்றுமில்லை என்பதே தெவிட்டும் தேடலின் தீரா வேகம்....யாரின் கனவாய் இந்த வானம்.... யாரின் இருளாய் இந்த பகல்.. யாரின் சிலையாய் இந்த சினுங்கல்..... யாரின் பிழையாய் இந்த மாற்றம்.... யாரின் நிலவாய்... இந்த தேசம்....?
கனவென்பதே கனவாகுமோ...! கனவாகும் என்பதில் கனவாவது கனவா...?...கணிக்க முடிந்த கண்ணுக்குள் கடல் ஓசை இதழ் விரிகிறது.... கடந்து சென்ற கனவுக்குள் நுரையாகிறது பிறை தேடும் நிலை ஒன்று....நிலவு தேச ராணியாய் நான் இருக்க.... நிலவின் வாசல் கவிதை வாசிக்கிறது.. வாசித்த கவிதையெல்லாம், சுவாசித்த பொழுதுகள்....
பொழுதுகளில், பொய்யாகும் கனவோ..... மெய்யாகும் சுகமோ... மெய்யாகி பொய் ஆவதில் பொய் ஆகும் மெய் கூட. பொய் ஆகி மெய் ஆவதில் மெய் ஆகும் பொய் கூட. கவிதைக்கு பொய் மட்டுமா அழகு... அழகுக்கும் மெய் கூட கவியே....பொறிவானம் போலே வரியான மழைத் துளியில் இதழ் தீண்டும் நொடிக்கொரு தரம் புதுக் கவிதை.....படித்திட்ட வெற்றிட மழை... வேர்த்திட்ட கட்டடம் சரிகிறது.....
கண்கள் தேடும் காற்றுப் பூக்களில்... கை விரித்த மழலை, கண் விரித்தும், கன்னக் குழி சிரிக்க ஒரு பூபாளம்.... உள் வாங்கி தீர்கையில் வேர் ஒன்று முளைத்து வேறாக எனை மாற்றுகிறது.... தீண்ட தீண்ட தகுமோ..... தீராத சுகமும்., மீண்டும் மீண்டும் வருமோ... தீண்டாத அகமும்,...
வேலி தாண்டும் பாவாடையில் வெளிதாண்டிய நட்சத்திரப் பூக்கள்... சிறு தயக்கம் இனி இல்லை... பெரு மயக்கம், மொழியில்லை ... கருவறை தாண்டிய கடவுளும் இனி காற்றில்லா தேசத்தில்..... சிறகாகும் சிந்தனையில் மலை தாண்டும் ஆழ் மனது....என் வானம் என் பூமி....இடையில் இனி இல்லை கோடு.....வசந்த கால வழி படித்த மாலை மயக்கம்... தொடுவானம் வரைந்து கொடுக்கும் ஓவியக் காடு....மதிய நேர சூரியனில் சிறு துளை இடவும் தெரியும் .... இனி சிங்கார மாலையில் சிரித்திட்ட நிலவின் பின் வாசல் உடைக்கவும் புரியும்... காடு மலை தாண்டிய காட்டாற்றின் கை பிடித்து கூழாங்கல் ஒன்றை பிடிக்கவும் முடியும்.. தேகம் தாண்டிய திருவள்ளுவரை என் தமிழ் கூறும் திசையெங்கும் உணரவும் முடியும்.. படித்திட்ட பொழுதுகளில் வடித்திட்ட சிலையென ஒரு காகிதம் கதை சொல்ல வைக்க உடையும் சாத்திரம்.. விடையும், பாத்திரம்.
சொல் என்ற மனதில் வில் பூத்தது கள்ளென....கள் வடித்த தாக்கத்தில் வில் நெளிந்தது சொல் என.. அது இதுவோ.. இது அதுவோ... எது அதுவோ.. சிரித்திட்ட நொடியெங்கும்.. சில்லிட்ட வானவில்.. நிறம் தாண்டிய கனவுகளில்... நிலையில்லை நிமிடங்கள்.... நின்று காட்டும்.. நித்திரையில்.. நிஜமில்லை.. முகத்திரைகள்...சொர்க்கம் என்ன.. நரகம் என்ன... சொல் உண்டோ... சொக்குவதைக் குறிக்க.. சொக்கி நிற்கும் மாமலையில் நானும் ஓர் உலகமன்றோ...!
மரம் சொல்லும் தத்துவம் மழை.... மழை சொல்லும் தத்துவம்... மரம்.. உதிரத் தொடங்கிய மனதில்... உதிரம் பச்சை நிறத்தில்....சதிராடிய சதுர வட்டத்தில்.... முக்கோண புன்னகையாய் ... புள்ளியானது உயிர்....துள்ளி ஆடியது,மலை கொண்ட பயிர்...எல்லாம் வேண்டும்... அந்த எல்லை கூட மீண்டும்.... கல் கொண்ட சிற்பங்களில்... உளி இல்லா கண்கள் வேண்டும்... மொழி இல்லா பாஷைகளிலும்..... மெய்யான விழிகள் வேண்டும்.....காடு கொண்ட காட்டுக் குருவியின் கவிதை மொழியில் ஒரு கத்தல் வேண்டும்... உடல் தொட்டு ஊடுருவி.. கண்ணாடியை பின் கசியும்.. மழைத் தூறல் மீண்டும் வேண்டும்....மாண்டும் மீண்டும். தீட்சண்யம்... தீ போல.... மோட்சம் புது நீர் போல... அச்சம் இனி இல்லை ... மிச்சம் இந்த பூமி...ஓடி ஓடி.. ஒரு நாள் பறக்கத்தான்.... பறக்க பறக்க புள்ளியாகி, சாதுமாகி வாதமாகி, வேதமாகி... பூதமாகி....மீண்டும் மீனாகி... ... நீயாகி நானாகி...யாதுமாகி வெளியாகி வானோடு வானாகி..........
"அப்பப்பா....... மூச்சு வாங்குது... என்ன இதுக்கு மேல எழுதலையா....? இடையல வந்து கெடுத்திட்டேனா... சாரி... என்ன பண்ண.. என் வேலை அப்டி... கிளம்பு போலாம்.." என்றான்.. முகமூடி மனிதன்....
மெல்ல மலை இறங்கிக் கொண்டிருந்தார்கள்... இருவரும்...
கிருத்திகா... "யார் இவன்.. எதற்கு தன்னைக் கடத்திக் கொண்டு போகிறான்.." என்று யோசனையோடு.....
மிஸ்ட்டர்.. முகமூடி.. "நான் ஓட மாட்டேன்.. கைய அவிழ்த்து விடு" என்றாள்...
முகமூடி மனிதன் மெல்ல சிரித்தான்...
சற்று நேரத்துக்கு முன்.........
மழையோடு....கடவுள் தேடுவது... மழையாகி கடவுளாவது.....எத்தனை தேடியும்.... அலுக்காத வாசலை ஒவ்வொரு கோவிலும் கொண்டிருப்பதில் கண்கள் நிறைந்த சியாமளா இன்னும் இரண்டு கண்கள் கேட்டு கவிதை வரையும் பயணி.....
பயணிக்க பயணிக்க கிடைத்துக் கொண்டே இருப்பதில் ஒவ்வொரு கடவுளும்.. ஒவ்வொரு நிலை...தன்னோடு சுற்றுலா வந்த மாணவ மாணவியருக்கு...கோவிலை சுற்றிக் காட்டிக் கொண்டே... சிலைகளின், சிற்பங்களின்... ஓவிய வேலைப் பாடுகளில் லயிக்கத் தொடங்கிய தூரத்தில்... மனம் சிறகாகி மழையானது.... வெளியெங்கும், வான் மழை.. உள் எங்கும்,ஆன்மீக மழை...கண்கள் மூடி உள் நோக்கிய பயணத்தில் இல்லாமல் போகும் தருணமே...எல்லாம் ஆகும் கருணை நிறைகிறது....
கருவறைக்குள் அமர்ந்திருந்த சாமி சிலை.... தன்னையே பார்ப்பது போல உணர்ந்தார்.... அது தானே, உன்னத நிலை.. கடவுளின் தரிசனம் என்பது அது தானே.. நம்பிக்கையில் பிழைத்துக் கிடக்கிறது,வரங்கள்...
கரங்கள் கூப்பிய நிலையில் கண்கள் நீர் சுரந்தன.... அமைதி.... பார்க்கும் இடமெங்கும் கோவிலுக்குள் அமைதி...பார்க்காத இடம் கூட அமைதியாக இருக்கத் தோன்றும் நிலைப் பாட்டில் நித்திரை இல்லாத கதவுகள் திறந்து கொண்டே இருக்கின்றன...
"என்னடா மாப்ள இது.. சாமி சாமின்னு சொல்லி ஒரு கூட்டம் ஊற ஏமாத்துது... கோவில் கோவில்னு சொல்லி ஒரு கூட்டம் தன்னையே ஏமாத்திக்குது...." புலம்பியவனின் வார்த்தைகளை காதில் வாங்கிய சியாமளா... சிரித்தார்...
"அப்படி இல்ல முகில்....இது நிஜம்,...." என்றார்...-கண்களில் அமைதி.... நெஞ்சினில்... உறுதி.... சொல்லில் விழுமியங்களின் கோடு பலமாய் இருந்தது....
"சரி மேடம்... நான் நேராவே கேக்கறேன்.... நீங்க கடவுளை நேர்ல பார்த்து இருக்கீங்களா...?"-முகிலின் கண்கள் ஏளனமாய் சிரித்தன... அது மார்சியத்தை தவறாக புரிந்து கொண்ட துடுக்குத் தனத்தின் தான்தோன்றித்தனம்...
"கடவுள எதுக்கு நேர்ல பாக்கனும்... பாக்காத வரை தான் முகில், அவர் கடவுள்... பார்த்துட்டா... ஒண்ணுமில்ல.. உங்க தலை முறை பாஷைல சொல்லனும்னா...... மொக்கை...."-உடைக்க முடிவெடுத்த பின் உடைவது எதுவாக இருந்தாலும் யோசிக்க கூடாது.... என்பது போல புன்னகையை சிந்தினார்.
அனைவரும் சற்று கவனத்தை தன் ஆசிரியரான சியாமளா மீது குவித்தனர்....
"உங்க எல்லாருக்கும் கடவுள்னா தலைக்கு பின்னால ஒளி வட்டத்தோட, இருக்கிற நகையெல்லாம் போட்டுக்கிட்டு முன்னால வந்து புன் சிரிப்பு சிரிக்கணும்.. இல்லையா...? உங்கள சொல்லி குத்தமில்ல பசங்களா.. நம்ம சினிமா 100 வருசத்துல பண்ணின மோசமான விளையாட்டு இது..."-தலையில் அடித்துக் கொண்டார் சியாமளா
"மேடம், மேட்டர்க்கு வாங்க ....கடவுள் இருக்காரா.. இல்லையா... இருந்தா எங்க இருக்கார்... இவ்ளோ பிரச்னை போயிட்டு இருக்கும் போது ஏன் இங்க வந்து தரிசனம் குடுக்கல.. ஏன் இன்னும் இஸ்ரேல் பாலஸ்தீனம் சண்டை போயிட்டு இருக்கு.... ..." -அடுத்த கொக்கியைப் போட்டான் முகில்....
முகிலும் விடுவதாக இல்லை...சும்மாவா.. கார்ல் மார்சை கரைத்து குடித்தவனாயிற்றே...
"எனக்கு, இருக்கிறார். இருக்கிறார் என்று நினைப்பவர்களுக்கு இருக்கிறார். உன்னைப் போல இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லை.. அவ்ளோ தான்...."
"அப்போ கடவுள் என்பது தனி மனித நம்பிக்கை சார்ந்த விஷயம்...... இல்லையா...?"
"ஆமா..."
"அப்டீனா எதுக்கு இங்க இவ்ளோ கோவில்கள்.. சர்ச்சுக்கள்.. மசூதிகள்.....?"
"சிம்பிள்.... நம்பிக்கையை பலப்படுத்த முகில்.... உனக்கு மார்சின் தத்துவம் எப்படி உன் மனதை தெளிந்த நீரோடையாக்கி பலப்படுத்தி உன்னை வழி தவர விடாமல் நேர் கோட்டில் செலுத்துகிறதோ.. அப்படி, கடவுள் என்பது எனக்கு நம்பிக்கை.. என்னை,என்னைப் போன்றோரை நேர் கோட்டில் வழி நடுத்தும் ஒரு தத்துவம்.. அது உள் உணர செய்யும் மகத்துவம்...ஒவ்வொரு கோவிலுக்குப் பின்னும் ஒரு சூட்சுமம் இருக்கிறது... நிஜம் இருக்கிறது... நம்பிக்கை இருக்கிறது..... அறிவியல் இருக்கிறது... கூட்டுப் பிராத்தனையில் உயிர் பிழைத்த சம்பவங்கள் எத்தனை உண்டு..... தெரியுமா...? ஒவ்வொரு கோபுரமும்.. யாரோ ஒருவனுக்கு, ஒருத்திக்கு ஊருக்கான வழியைக் காட்டுகிறது... வெள்ள அபாய நாட்களில், ஒரு வேளை, ஊரில் இருக்கும் பயிர்கள் அனைத்தும் அழிந்து போனால் கூட கோபுரத்தில் சேமிக்கப்படும் விதை நெல்கள் கொண்டு மீண்டும் தன்னை சரி செய்து கொள்ள முடியும் என்று நம்பித்தான் மனிதன் ,கோபுர கலசத்தில் நெல்மணிகளை வைத்தான்... அது மட்டுமில்லை.... இரிடியத்தால் செய்யப்பட்ட கோபுர கலசம்... விழுகின்ற இடியை தாங்கி நின்று கோவிலை மட்டுமல்ல. சுற்றி இருக்கும் குறிப்பிட்ட அளவுக்கான கட்டடங்களையும் காக்கிறது...... பெரு வெளியில் இருந்து கிடைக்கும் காஸ்மிக் கதிர் வீச்சை தன்பால் இழுத்து கோவிலுக்குள்ளும், கோவிலைச் சுற்றியுள்ள மக்கள் அனைவருக்கும் தருகிறது....... இன்னும் சொல்லப் போனால்.. கோவிலுக்குள் வரும் போது மட்டும் தான்.. மனிதன் தன்னையும் அறியாமல் உண்மையாக இருக்கிறான்.. நல்ல எண்ணங்களை சுமந்து நிற்கிறான்.. பல பேரின் நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்து, பிரபஞ்சம் சுற்றி, காஸ்மிக் கதிர் வீச்சு மூலமாக மீண்டும் கோவிலுக்குள் வந்து சேர்கிறது....முடியில்லாத மொட்டை தலையில் இன்னும் வேகமாக இறங்குகிறது..அதற்கு தான் கோவிலுக்கு, மொட்டை போடுவது...பெண்கள் நிறைய நகை அணிந்து கொண்டு போகும் போது சுலபமாக ஈர்க்கிறது.... அதற்கு தான் அத்தனை அலங்காரம், கடவுளுக்கும் கூட....கோவிலுக்குள் செல்கையில் நினைக்கப் படும் நல்ல எண்ணங்கள், பாசிட்டிவ் சக்தியாக உருவெடுத்து ஒன்றும் ஒன்றும் கூடி கூடி பெருகி பெருகி.... வலிமையாகி மீண்டும் நல்ல பயன்களை பிரித்துக் கொடுக்கிறது..அதற்கு தான் இத்தனை கோவில்களும் கோபுரங்களும்... கடவுள்களும்... தேங்காய் சுற்றிப் போடுவது முதற்கொண்டு...கற்பூரம் காட்டுவது வரை... தோப்புக் கரணம் போடுவது முதல்...திருவிழாக்கள் நடத்துவது வரை எல்லாவற்றிலும் அறிவியல் இருக்கிறது....அலகு குத்திக் கொள்வதில் கூட அறிவியல் இருக்கிறது....இன்னும் சொல்லப் போனா... பல வருஷ சண்டை கோவில்களால் தீர்ந்து இருக்கின்றன... பல குடும்பங்களுக்குள் சம்பந்தம் ஏற்படுத்தி தருகின்றன கோவில்கள்...... எத்தனை எத்தனை காதல்கள் கோவில்களால் வாழ்கின்றன....சக மனிதனும் நலமுடன் இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒரே இடம் கோவில் தான்.. பிள்ளைகளா.... அது ஒன்று போதாது கோவில்கள் கட்ட?...கோவிலுக்குள் இருப்பதனால்.... நல்ல மனது கடவுளாவதில் என்ன தவறு இருக்க முடியும்....? சிரித்த படியே.... சிலைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்...சியாமளா
அனைவரும் கை தட்ட... முகில் மட்டும் தட்டவில்லை....
சட்டென நினைவு வந்தவனாய் "அப்போ ஏன் மேடம்.... இன்னும் சிலரை கோவிலுக்குள்ளயே விட மாட்டேங்கறாங்க..." என்றான்....
மேடம்... அமைதியாய்... மெல்ல மெல்ல முகிலை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்...
"அப்புறம் ஏன் மேடம்.. காசு குடுத்தா சீக்கிரம் போய் வழிபடலாம் .. இல்லனா, கூட்டத்துல முண்டியடிச்சு தான் போகணும்னு ஒரு சட்டமிருக்கு...?"
கண்கள் மூடி தியானிக்கத் தொடங்கினார் சியாமளா.......
கோவிலை சுற்றி விட்டு வந்த மாணவ மாணவியர்களின் கண்களில் படவேயில்லை சியாமளா மேடம்....
"எனக்குள்ளும் ஒரு கடவுள் இருக்கிறார்.. என்ன சொல்றீங்க மேடம்" என்று கேட்டது ஆம்னியை ஓடிக் கொண்டிருந்த முகமூடி மனிதன் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகம் இல்லை....
சற்று நேரத்துக்கு முன்.......
கவிஜி