கவிதைக்காக பிறந்து கணினி துறையில் வேலை பார்க்கும் ஒரு சராசரி தமிழன் ஜின்னா

.....இப்படித்தான் ஜின்னா தன்னை சுயவிவரத்தில் அறிமுகப் படுத்துகிறார் .ஆனால் மேற்கூறிய எல்லாமே உண்மை . ஒன்று மட்டும் பொய் . அவர் சராசரி தமிழர் இல்லை .சிறந்த தமிழர் .
அவர் இதுவரை படைத்த படைப்புகள் 27 மட்டுமே .

கவிதைகளை படியுங்கள் .மனிதம் , பெண் முன்னேற்றம் , நிகழ்வுகள் பற்றியே நிறைய இருக்கும் . கொஞ்சம் காதல் , கொஞ்சம் இயற்க்கை .
எனக்கு ஜின்னாவிடம் பிடித்தது சொல் நாகரிகம் . அவர் எங்கும் வன் சொற்களை உபயோகித்ததே இல்லை என சொல்லலாம் . எல்லாம் அழகிய சொற்கள் .. கலந்து தருவார் உறைக்கும் நிஜங்களை . வளமான சிந்தனைகளை.
இன்று நான் எடுக்கப் போவது அவரின் மூன்று கவிதைகள் .
முதலில் .."அடுத்த நூற்றாண்டில்".
நாம் இந்த நூற்றாண்டில் நடத்திக் கொண்டு இருப்பவைகளை தொடர்ந்தால் அடுத்த நூற்றாண்டு எப்படி இருக்கும் என நிஜத்தை உரைக்கிறார் . உறைகிறோம்.

// செடியில் புதிதாய்
பூக்கள் பூக்குமா ?
இல்லை
பூப்பதை மறந்து
குண்டுகள் காய்க்குமா ?

வறுமை கோடு
அழிந்து போகுமா ?
இல்லை
வறுமை கோடே
வரைபடம் ஆகுமா ? //
என போகிறது கவிதை. ஒவ்வொரு பத்திகளும் நம்மை எச்சரிக்கிறது . கண்டிப்பாய் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை .கடைசி வரிகள் கண்டிப்பாய் படிக்க வேண்டும் .கூடவே மூன்றாம் உலகப் போர் கவிதையையும் படியுங்கள் .
ஒரு கவிஞன் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த கவிதைகள் .

அடுத்து
"என் கடைசி மூச்சும் கார்கிலுக்கு ".
இந்த சுதந்திர தின கொண்டாட்டங்கள் போது நான் தளத்தில் பெரும்பாலும் கண்டது ..ஏன் இந்த சுதந்திரம் ? என்ன கண்டோம் ? போன்ற படைப்புகளே . நானே கூட அப்படித்தான் எழுதினேன் .
அத்தருணத்தில் இக்கவிதையை பதிக்கிறார் ஜின்னா .....
(நம் தாய் நாட்டைக் காத்துகொண்டிருக்கும் போர் வீரர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்...
கார்கில் எல்லையில் காவல் நிற்கும் ஒவ்வொரு போர் வீரரின் இதயத் துடிப்புகளே இந்த கவிதையில்.... ) என்ற முன்னுரையோடு .
கீழே கவிதை துளிகள் .

//எதிரிகளால் சுடப்பட்டு
-----------எனது உடல் சரிந்தாலும்
உதிரத்தால் முத்தமிட்டு
-----------உயிர்கொடுப்பேன் மண்ணிற்கு !

துப்பாக்கி சுமக்கும்என்
-----------தோள்களினால் முடியுமெனில்
எப்போதும் தாய்நாட்டை
-----------ஏந்திக்கொண்டு நின்றிருப்பேன் ! //

முழுதையும் படியுங்கள் . தாய் மண்ணை நேசிக்கிறவனின் உணர்வு நமக்கும் நிச்சயம் பரவும் .
கடைசியாய் நான் ரசித்தது , வியந்தது , மூழ்கியது அவரின் 'இடையில் கலைந்த கனவுகள் ' படித்த போது ...நாம் சொல்ல ஆசைப்படுவதை சொல்ல இயலாத போது வரும் வேதனைகளை வடித்துக் கொட்டுகிறது இந்த கவிதை .
எப்படி இந்த ஆளுக்கு இப்படி வரிகள் கவிதைக்கேற்றவாறு வந்து விழுகிறது ? என்று ஆச்சர்யப்படவைத்த கவிதை . முழுதும் படியுங்கள் .மூழ்கிப் போவீர்கள் .
கடைசி துளிகள் மட்டும் கீழே .

//உரக்க கத்தியும்
ஊருக்கே கேக்காத
ஊமை ஒப்பாரியின்
ஓசையற்ற விசும்பலாய்...

கவிதைக்கு உயிர் கொடுக்க
கருவறைக் கழிவுகளை
காகிதத்தில் பரப்பிய
முட்டாள் கவிஞனின்
மூட நம்பிக்கையாய்....

கனவு கலைகிறது...
கவிதை முடிகிறது...//

ஜின்னா எழுதிய அழகான வாழக்கை போட்டி கவிதை ( பரிசு வென்றது ) ,கடைசியாய் எழுதிய "அம்மா " , இன்னும் சில நாட்டு நடப்புகள் கவிதைகள் எல்லாமே என்னை ஈர்த்தவை . உங்களையும் ஈர்க்கும் .
ஜின்னா நிச்சயம் பார்க்கப் பட வேண்டியவர் . பாராட்டப் பட வேண்டியவர் . அவர் பிறர் கவிதைக்கிடும் கருத்துக்களையும் நான் கண்டதுண்டு . அவரின் குணநலன்களும் , பண்புகளும் அவற்றில் தெளிவாகிறது .

வாழ்த்துக்கள் ஜின்னா . தொடருங்கள் ...

எழுதியவர் : ராம்வசந்த் (2-Nov-14, 2:21 pm)
பார்வை : 508

மேலே