அறத்தால் வருவதே இன்பம்
அன்னையின் அறம் அன்பு செய்வது!
ஆசானின் அறம் அறிவு புகட்டுவது!
இல்லறத்தான் அறம் விருந்து ஓம்புவது!
ஈவோனது அறம் ஈகையை வளர்ப்பது!
உற்றாரின் அறம் உண்மையாய் இருப்பது!
ஊராரின் அறம் ஊக்கம் கொடுப்பது!
எல்லோரின் அறம் எளிமையாய் வாழ்வது!
ஏற்றதோர் அறம் ஏந்திழையை மதிப்பது!
ஐயன்மீர்! உம் அறம் ஐயமற கற்பது!
ஒவ்வொருவரின் அறம் ஒற்றுமையாய் இருப்பது!
ஓதும் மறையோர் அறம் ஓதுவதை உணர்வது!
ஒளவை தந்த அறம் அறநூல்கள் விளக்குவது!
பிள்ளையாய் இருந்தால் பெற்றோரையும் பெரியோரையும்
மதித்து நடப்பதே அறம்!
வளர்ந்தநிலைப் பிள்ளையென்றால் நூல்களைக் கற்பதும்
அதன்வழி நடப்பதும் அறம்!
அடுத்தநிலை யென்றால் அறமும்புகழும் பேணித்
தொழில் செய்வதுவே அறம்!
தொடுத்த தொழிலில் பொருளீட்டலும் பிறர்க்கு
ஈந்து மகிழ்வதும் அறம்!
இல்லறம் பேணுவதும் நல்லறம் பேணுவதும்
சொல்லறம் பேணுவதும் அறம்!
வல்லமை கொண்டே வாய்மையைக் காப்பதும்
நேர்மையை ஏற்பதும் அறம்!
அறவழி நின்று நேர்வழி சென்று
திரட்டிய செல்வ மதை
அகமது குளிர்ந்து முகமது மலர
ஜகமெங்கும் கொடுப்பது அறம்!
உள்ளம், சொல், செயல் இம்மூன்றும்
ஒருநேர்கோட்டில் உடையது அறம்!
உலக உயிரனைத்தும் தான் உணரும்
கடமை என்பது அறம்!
நிறைவாய் உயர்ந்த செல்வரும், சான்றோரும்,
தானதருமம் செய்வது அறம்!
உயர்வாய் உலகில் வாழும் பெண்டிர்
தாங்கொண்ட கற்பு அறம்!
துறந்தவர் துறவி என்பார் எல்லோரையும்
இறையென மதிப்பது அறம்!
அறமதை அகத்துள் நிறுத்தி நிதம்பேணுவோர்
பெறுவர் நற்பேறெனும் அறம்!
அறநூல்கள் பதினொன்றும் எடுத் துரைப்பதும்
விரித் துரைப்பதும் அறம்!
அறத்துள் நாயகமாய் எல்லாச் செயல்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பதும் அறம்!
அறமது செய்ய வயதொன்று மில்லை!
அறத்தினைச் செய்ய அகன்றிடுமே தொல்லை!
முழுமனதுடன் செய்யும் நல்லறத்தினால்
முழுப்பயனையும் நாம் நிதம் வெல்லலாம்!
அறத்தின் வழியே கிடைப்பதே இன்பமாம்!
மற்றதெல்லாம் இன்பம் தருவதாய்த் தோன்றலாம்!
பிறசெய்கையால் விளையும் இன்பம் முடிவினில்
துன்பந் தனையே தந்து செல்லும்!
செய்ய வேண்டிய செயல்களுள் ஒன்றாய்
உய்யும் வழியென உறுவதும் அறமே!
அறமே நிறைவாய் இன்பம் தருமே!
அறமே பிறவியைக் கடக்க உதவுமே!
அறமே சிறப்பும் செல்வமும் தருமே!
நன்மை யாவும் விளைவது அறத்தால்!
தீமை யாவும் முறிவது அறத்தால்!
அழிவே இல்லா ஆனந்தம் தருமே!
அறவோர் புகழும் ஆன்ற நல்லறமே!
கண்ணும் கருத்தும் கடமையில் நிறைவாய்
இருந்தால் விளைவது இன்பம்!
எண்ணும் எண்ணம் யாவும் சுத்தமாய்
இருந்தால் விளைவது இன்பம்!
சொல்லும் சொல்லில் தூய்மை சிறப்பாய்
இருந்தால் விளைவது இன்பம்!
வெல்லும் வகையை அறிந்தே யாமிங்கு
வென்றால் வருமே இன்பம்!
உள்ளும் புறமும் அகமே மேவி
உண்மை யிருந்தால் இன்பம்!
துள்ளும் மனமும் குணமும் தூய்மை
துலங்கிட வருமே இன்பம்!
ஒல்லும் வகையான் அறிந்தே யாமிங்கு
அறம்செய்தால் வரும் இன்பம்!
பல்லக்கில் செல்ல பண்புடன் நாம்
அறம்செய்வதால் வரும் இன்பம்!
தொல்லைகள் அகல வல்வினை விலக
துலங்கிடுமே நம்முள் இன்பம்!
செல்லும் வழியில் அறம் செய்வதினால்
செல்வமும் சிறப்பும் சேரும்!
உள்ளபடி இன்பம் தருவது அறமே
உணர்ந்தால் நன்மை பெருகும்!
கள்ளமில்லாமல் கடமையைச் செய்தால்
கனிவுடன் துணிவும் பெருகும்!
பிறவிப் பெருங்கடல் கடந்திடவே நமக்கு
உதவிடுமே நல் அறமே!
துறவியும் இங்கே சிறப்பு பெறுவது
அறத்தை துறக்காததனால் தானே!
அறவழி நின்று செல்வம் சேர்த்து
சிறப்பினைப் பெறுவோம் நாமே!
சிறப்பினைப் பெற்று ஈகையைச் செய்து
மேலும் சிறப்போம் நாமே!!