வித்தக கவிஞர் பா விஜய்க்கு முருககவியின் கவிதை

ஆலம் விழுதெனவே அன்புத் தமிழ்த் தழைக்க
தோல்வி கண்டு துவளாமல் வேள்வித் தீயென வெகுண்டு
தன்னுணர்வினைத் தனக்குள்ளேத் தீப்பொறியாய்த் திகழவைத்து
சுடும்நெருப்பெனவே உறுமுணர்வினை உள்நிறுத்தி யுறம்பெற்று
கடும் உழைப்பினால் உலகம் கண்டுணரும் நிலையெய்தி
பாவினைத் தன் முதலெழுத்தாக்கி பெயரிலே வெற்றியைத் தேக்கி
நாவினில் நற்றமிழ் பொருந்த நானிலம் போற்றும் புகழ் பெற்றவன்.
பா. விஜய் என்றவுடன் பாவின் இனிமையறிய
ஆர்வமுடன் உள்ளுணர்வு ஆர்ப்பரிக்கும் பேறுபெற்றவன்
ஊர்முழுதும் தானறியும் உலகுதமிழருள் ஒருவன்
கார்முகிலாய் கவிதைமழை காட்டாறாய் கருத்துக்களை(லை)ப்
பார்முழுதும் பரப்பும் விதம் படித்திடவும் படைத்திடவும்
நாள்முழுதும் நானறிந்து நற்றமிழில் உரைத்திடவும்
தேன்முகிலாய் தானுணரும் சிறப்பான கவிதைகளை
வாய்மையென வாழ்த்துரைத்து வாழியெனப் போற்றிடுவேன் !
சமுதாயச் சரித்திரத்தில் சாமர்த்தியமாய்ச் சேர்ந்தவிதம்
அமுதெனவே அறிந்து சொல்ல ஆர்வமுடன் வந்துவிட்டேன்
இனிதான இந்நாளில் யானெடுத்த முயற்சியிலே
புதிதாக புதுமைபல பூத்திடவே வாழ்த்துங்களேன்
இறைநிலையின் திருவருளால் நிறைநிலையை அடைந்திடவே – தமிழ்த்
துறைசார்ந்த புனிதரெலாம் துணைநிற்க வேண்டுகிறேன்
அகமுணர்ந்த கருத்துகளை முகமலர எடுத்துரைப்பேன்
யுகங்கடந்தும் தமிழ்வாழ யூகித்து வாழ்த்திடுவேன்.

கன்னல் மொழியெடுத்து ‘காகிதமரங்கள்’ செய்தவிதம்
இன்னும் முயன்று அழகுமரபு கவிதை ஆக்கும்திறம்
எண்ணம் உயர புதுமையினை எடுத்துச் சொன்னவிதம்
மின்னல் போன்று துடிப்புடன் சொல்லோவியம் படைத்தவிதம்
என்னென்பேன் உள்ளவண்ணம் சொல்லப்போனால்
உன்னதப் படைப்புகள் உயிர்கொண்டு வந்ததென்பேன்
சுந்தரத் தமிழினையே சுதந்திரமாய்த் தந்தவிதம் கண்டுகளிக்கின்றேன்
வந்தனம் தமிழா ! நின் தமிழினைத் தந்தனை நன்றே !
எந்தையும் தாயும் மகிழ்ந்த இத்திரு நாடு உனைக்கண்டு
விந்தை கொள்ளுமா ? வியப்பென்ன வியப்பு வித்தகக் கவியென்றால்
வித்தகக்கவியே ! நீ வெளியிட்ட புத்தகம் பலபயின்று
புத்தொளி பெற்றிட்ட எண்ணற்ற மானிடருள் யானும் ஒன்றென்பேன்
கத்தாழையாய் குளிர்ச்சி தரும் கருத்துகளை ஆய்ந்துதருவேன்
வித்தாரம் பேசுவோருக்கும் விருந்து பல படைத்திடுவேன்
தூய்மையான அறிவு துளங்கிட நற்கருத்துகளைப் படைத்து
தமிழ்த்தாயின் மேன்மை கூட்டுவேன் !
இன்னும் மென்மையாக்குவேன் யான் !!

எழுதியவர் : முருக.கவி (5-Nov-14, 4:43 pm)
சேர்த்தது : மு. கவிதாராணி
பார்வை : 114

மேலே