தேன்மொழியின் தியாகம்---ப்ரியா

இரவு மணி 10-ஐ நெருங்கிக்கொண்டிருக்க......
"தேன்மொழி தேன்மொழி தேன்" என்று அம்மா கத்தினாள்.
அம்மாவின் குரல் தேன்மொழியின் நினைவைக்கலைக்க "என்ன அம்மா" என்று கோவமாய் கேட்டாள் அவள்.
என்னடி இப்படி கத்துறா? சாப்பிட்டுட்டு தூங்கு நேரமாயிடுச்சி இல்ல என்றாள்.
எனக்கு பசிக்கல அம்மா அசைன்மென்ட் எழுத நிறைய இருக்குது முடிச்சிட்டு தூங்குறேன்,,, நீங்க போங்க என்று பதில் சொன்னாள்.
பலத்த மழையால் திடீரென மின்வெட்டு ஏற்பட தனது அறையில் மேஜையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாள் தேன்மொழி.
அப்படியே ஆழ்ந்த யோசனையில் கண்ணை மூடி நேற்று நடந்த நிகழ்வை மனதில் ஓடவிட்டாள்.......!
நேற்று கல்லூரி ஆண்டுவிழா அனைவரும் சந்தோஷமாய் ஊர்சுற்றும் குருவியைப்போல் சுற்றிக்கொண்டிருந்தனர்.
காலையில் தொடங்கி அழகாய் அமைதியாய் நடந்து கொண்டிருந்தது ஆண்டுவிழா.
கல்லூரித்தலைவர்கள் மாணவர்கள் என அனைவரும் பங்குபெற மாணவர்களின் ஆரவாரத்துடன் "மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்" என்ற பாடலுக்கு மூன்றாமாண்டு வேதியல்துறை மாணவர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர்.........!
அப்பொழுது.......
வேகமானக்காற்று இசைக்க மேளதாளத்துடன் ஓவெனக்கத்திக்கொண்டு பூலோகத்திற்கு வந்தாள் வானத்துதேவதை.....
மழை இன்னும் வேகமெடுக்கும் என உணர்ந்த மாணவர்கள் சிட்டாய் கலைந்தனர் அவ்விடத்தை விட்டு,,,,,, மாணவிகள் துப்பட்டாவை தலையில் போர்த்திவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் தேன்மொழி நகர்ந்து ஒரு வகுப்பறையின் வராந்தாவில் நின்றாள்.எனென்றால் மழை என்றால் ஆகவே ஆகாது......?மழைத்துளியில் சிறிது நனைந்தாலோ அல்லது விளையாடினாலோ அவளது உடலுக்கு ஒத்துக்காது அதனால் ஒதுங்கிவிட்டாள்.
மழையின் அழகை ரசித்துக்கொண்டே இருந்தாள்.......
கல்லூரியிலிருந்து ஒவ்வொன்றாக அனைவரும் கிளம்பினர் நேரம் போய்க்கொண்டிருந்தது ஆனாலும் மழை நின்றபாடில்லை அதிகரித்துக்கொண்டிருந்ததே தவிர சற்றும் ஓய்வெடுக்க மனமின்றி அழுதுகொண்டிருந்தது மழை.
நதியாய் நீர் ஓடிக்கொண்டிருக்க,,, சூரியன் மேற்கே சாய்ந்துகொண்டிருந்தது, பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி பறந்துகொண்டிருந்தன, உழவர்களும் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு களைப்பில் மெல்ல வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தனர்.....நேரம்போக போக பயம் தொற்றிக்கொண்டது.
பொறுமையிழந்த அவளது கண்கள் வெறுப்புடன் தூரமாக உற்றுநோக்கிக்கொண்டிருக்க ஒரு உருவம் மழையில் குடையுடன் வந்து கொண்டிருந்தது.... முகம் தெரியா அளவுக்கு மழையின் வேகம்.......
"ஹலோ நில்லுங்க நானும் வரேன்" என்ற இவளது குரலில் நின்றது அந்த உருவம்..
பக்கத்தில் வந்ததும் அந்த முகத்தை பார்த்தவளுக்கு வெறுப்பு வந்தது......மன்னிச்சிடுங்க வேற யாரோன்னு நினைச்சிதான் அழைத்தேன் என்று வார்த்தை தடுமாறினாள் தேன்.....!
காரணம்......அவள் பள்ளியில் படிக்கும் போதே அவளை காதலிப்பதாய் சொல்லி அவள் பின்னால் சுற்றுபவன்தான் இந்த குடை மனிதன்........பள்ளியில் மட்டுமல்ல இப்பொழுது கல்லூரியிலும் காதலனாய் வலம் வருகிறான் இவள் விருப்பமின்றியே இவள் கண்களை அவன் கண்கள் தேனை ருசிக்கும் வண்டாய் மொய்த்துக்கொண்டிருக்கிறன.......!
அவனை வெறுத்துக்கொண்டிருக்கும் அவள் தேவைக்காகவும் அவனை அதாவது அவன் உதவியை பயன்படுத்த விருப்பமில்லாமல் ஒதுங்க நினைத்தாள்...
ஆனால் அவனோ மிகவும் நல்லவன் இரக்ககுணம் கொண்டவன் தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்தவன்.
அப்படிப்பட்டவனால் அவளை அப்படியே விட்டுவர மனமில்லை....
"பரவாயில்ல வாங்க நானும் அந்த வழியாகத்தான் செல்கிறேன்" என அழைத்தான் வேறு வழியில்லாமல் அவனுடன் அவனது குடையில் சென்றாள் இரண்டடி வைத்திருப்பார்கள் அதற்குள் அவர்கள் கண்களில் தோன்றினாள் அந்த பெண்.......
அந்தபெண் மழையில் கொஞ்சம் நனைந்தபடி அந்த வராண்டாவில் நின்றுகொண்டிருந்தாள் அவளைப்பார்த்தவன் அகல்யா என அழைத்தான்(அகல்யா பக்கத்தில் சென்றார்கள் இருவரும்)....
பாவம் இந்த பொண்ணுக்கு கண் தெரியாது ஆனால் நல்லா பாடுவாள் நம்ம கல்லூரியில் நடக்கும் அனைத்துப்பாட்டுப்போட்டியிலும் இவள்தான் முதலிடம் என்று அவளை புகழ்ந்தவன் இவளை குடையில் அழைத்து அவள் வீட்டில் விட்டுவிடு நான் இந்த குறுக்கு வழியாய் சென்றுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மழையில் நனைந்துகொண்டு சென்றான்....!
அவன் சொன்னமாதிரி கண்தெரியாத அகல்யாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றாள் தேன்மொழி..
அவன் செய்தது சின்ன விஷயம் என்றாலும் கண்தெரியாத பொண்ணுக்கான அவனது அந்த சிறுதியாகம் தேன்மொழியின் மனதில் ஆழமாய் பதிந்தது கொண்டது.
இப்பொழுது அவள் ஒரு முடிவு எடுத்துக்கொண்டாள்.........
நாம் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை யாருக்காக எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் முடிந்தவரை நம் வாழ்வை நமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் தியாகம் பண்றதே சிறந்தது என நினைத்தாள்...!
காலையில் கண்விழித்த தேன்மொழி நிமிர்ந்து பார்த்தாள் அவளருகில் அவள் படிப்பதற்காக ஏற்றிவைத்திருந்த அந்த மெழுகுவர்த்தி முழுவதும் எரிந்து அணைந்திருந்தது????
அடுத்தவர்கள் வாழ்வில் ஒளியேற்றி இந்த மெழுகுவர்த்தி மடிந்ததைப்போல்..???!!!!நாமும் கண்தெரியாத குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியையாக மாறவேண்டும் ஒளியறியாமல் இருட்டுக்குள் இருக்கும் அந்த மாணவர்களின் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பதே இவளின் முடிவாக இருந்தது...
அதற்கு அவளின் மனதும் வேகமாக பச்சைக்கொடிக்காட்ட மற்றவர்களின் முடிவை சற்றும் எதிர்பார்க்காமல் அந்த மெழுகுவர்த்தியைப்போல் பலரது வாழ்வில் ஒளியாய் இருக்க தனது பயணப்பாதையை நோக்கிப்புறப்பட்டாள்......!!!!!