குற்றம் செய்யத் திறமை தேவையில்லை
கேள்வி ; - உள்ளூர் ரசிகர்களுக்கு உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளின் கூடியிருக்கும் பொறுப்புகள் எத்தகையது?
பதில் - முதலில் பார்க்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதாக கருதுகிறேன். ரசிகர்கள் பார்க்கிற அத்தனை படத்தையும் பார்க்க வேண்டும். இவர்கள் தன் சினிமாவை மட்டுமே பார்க்கிறார்கள். உறவுக்குள், உறவுக்குள் கல்யாணம் பண்ணிக் கொண்டே இருந்தால் உருவங்கள் ஒரே மாதிரி இருக்குமே தவிர, வியாதிகள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் சாதி திருமணம் போன்றவை எல்லாம் நடப்பதாக நினைக்கிறேன். ஒரு வித்தியாசமான சிந்தனைக்காக அல்ல. காதல் தான் இந்த சாதியை எல்லாம் ஒழிக்கும் என்று நினைத்தேன். இப்போ அதையும் கெடுக்கிறார்கள்.
கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் பேசுறோம். ஆனால் சாதி ஒழிப்பைப் பற்றி யாருமே பேச மாட்டிக்கிறோம். சாதி ஒழிப்பு ரொம்ப மெதுவா நடக்குது. சாதி இல்லையடி பாப்பா என்று பாட்டு பாடிய பாப்பாவிற்கு எல்லாம் கொள்ளு பேத்தி பிறந்தாச்சு. இன்னும் சாதிக்கலவரம் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏதோ தமிழர்களை மட்டும் சாடுவதாக நினைக்க வேண்டாம். நகரத்தில் இருப்பவர்கள் என்னிடம் என்னங்க சாதி என்று இன்னமும் பேசி கொண்டே இருக்கிறீர்கள் என்று? சரவண பவனில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு சாதி எங்கிருந்து தெரியும். கொஞ்சம் தள்ளிப்போனால் தட்டில் சாப்பாடு கொடுக்க மாட்டுக்கிறார்கள். அந்த அநியாயத்தை பத்திரிக்கைகள் கூட சுட்டுக் காட்டுவதில்லை. என்ன அக்கிரமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். சாதி மாறவில்லை என்பது தான் நிஜம். சொல்லுவதற்கே பயமாக இருக்கிறது. இப்போது உற்றுக் கவனித்தீர்கள் என்றால், 'தேவர் மகன்' கதையை எப்படி எழுதியிருக்க வேண்டும். சாதிக் கலவரம் என்றால் ரெண்டு சாதி காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், நான் காட்டவே இல்லை. நான் சொல்ல நினைத்தது அது தான். ஏன் வம்பு என்று நான் சொல்லவே இல்லை.
கேள்வி ; - இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவுக்கான ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் ஒரேயொரு தமிழ்ப் படம்தான் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி விழாக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது "தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா, கன்டென்ட்-டில் வீக்கா இருக்கு" என்றார். தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த நிலை?
பதில் ; - தலை குனிகிறேன். இன்னும் கோபத்தில் தலை நிமிர்ந்து அடுத்தப் படத்தில் நல்லா எடுக்கலாம். இதுக்கு மறுத்துப் பேசி, தமிழுக்கு இடம் கொடுங்கள் என்று பேசாதீர்கள். அது விலாசம். தகுதிக்கு இடம் கேளுங்கள். அது தப்பு என்றால் என்னவென்று பாருங்கள். நீ இந்த படிப்பு படிக்கல, அதனால் உனக்கு இந்த வேலை கிடைக்காது என்றால், அந்த வேலையை படித்து விடலாமே. இன்றைக்கே வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது நடக்காது. எனக்கே அந்தக் கருத்து உண்டு. நாம ஏதோ பெருசா சாதித்து விட்டோம் என்று பத்து படம் பார்த்து விட்டு எடுத்தால், நாமும் அதற்கு நிகராகி விடுவோமா? சிவாஜி மாதிரி நடித்துவிட்டால், அவரை விஞ்சிவிட்டதாக அர்த்தமா? யாரை மாதிரி பார்த்து நடித்தாலும், அது மிமிக்ரிதானே. 'கிஸ்தி, திரை, வட்டி' என்று நாங்கள் பேசியது எல்லாம் மிமிக்ரிதானே. நாகேஷ் மாதிரி செய்பவர்கள் எல்லாரும் நாகேஷ் ஆகிவிட முடியாது. அவர்கள் நாகேஷின் விசிறிகள்.
அந்த மாதிரிதான் நம்ம எடுக்கும் படங்கள் வந்து, வெள்ளைக்காரன் படத்தைப் பார்த்து காப்பியடிச்சு எடுத்தா அதற்கு நிகராகி விடாது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும், புதுமைப்பித்தனும் இப்போது இருக்கிற நிறைய நல்ல எழுத்தாளர்கள் மாதிரி, சினிமாவிலும் வர வேண்டும். ஜெயகாந்தன் எங்கிருந்து எடுத்தார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி ஊற்று. சுடச்சுட எப்போதும் வந்துகொண்டே இருக்கும். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அப்படி வர வேண்டும் சினிமாவில். வரும் என்று நம்புகிறேன். வராததற்கு வியாபாரம் பெரிதாக கலந்துவிட்டது. வியாபாரிகளும் பின்னாடி நின்றுகொண்டு பேனாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு வெற்றியின் ரகசியம் தெரியாது. எனக்கு எந்த அளவுக்குத் தெரியாதோ, அதேதான் அவங்களுக்கும். சினிமா காட்டப்படும் தளங்கள் மாறிக்கொண்டே வருகிறது. அந்தத் தளங்களில் எல்லாம் சுதந்திரம் வேண்டும். தனியாருக்குப் போய் சேர வேண்டிய பணங்கள் போய்ச் சேர வேண்டும். அபகரித்தல் என்பது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்தினால் எல்லாருக்கும் பணம் வரும். வேலி கட்டினால்கூட ஒத்துக்கொள்வேன். விஷத்தை போட்டால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
கேள்வி ; - சரி, அரசியல் தலையீடுகளைக் காட்டிலும், இணையத்தில் மலிந்துவரும் விமர்சனங்கள் மீதுதான் தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு ஒருவித அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து இருக்கிறது என்பதை கவனித்தீர்களா?
பதில் ; - இணையத்தில் விமர்சனம் பண்ணக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படித் தடுக்க முடியும்? என் கலைக்கு விமர்சனம் இருக்கக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு படம் நல்லாயில்லை என்று சொல்லும் உரிமையை நீங்கள் எப்படித் தடுக்கலாம். கமல் ஹாசனுக்கு நடிப்பே வரலைங்க, அவர் எல்லாம் வீட்டில் போய் நடிக்காமல் உட்காரலாம் என்று சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அந்த உரிமை உனக்கில்லை என்று சொல்லும் திறமை என்னுடையதாக இருக்கிறது. அதுதானே ஒரு நடிகனுடைய வெற்றி. ஆள் வெச்சு அடிக்கவா முடியும்.
--கமலஹாசன் , இன்றைய பேட்டியில்