என்றென்றும் வேண்டும் நீ
சுமைகூடி பலநாட்கள்
சோர்ந்திருந்தும், எனைஎழுப்பி
விளக்குமொரு புன்னகையில்
விரட்டும்ஓர் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
ஆயிரம்பேர் அருகிருந்தும்
எனையிழக்கும் ஒருதருணம்
விழிநீரில் சுமைபகிர்ந்
தெனைமாற்றுமொரு திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
ஏராளம் என்கனவு
என்னெதிரே மடிந்தாலும்
போராடி என்தன்மை,
திறமுணர்த்தும் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
நோக்கமேதும் எனக்கின்றி
என்நாட்கள் நகருகையில்
ஊக்கமெனக் குடனளித்து
உதவும் ஓர் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
எண்ணங்கள் செல்லஒரு
எழுச்சிமிகு வழியமைத்து
வண்ணங்கள் எனக்கும்தான்
எனநம்பி இயங்கவைத்து
"அதிசயமோ ஆனந்தம்?
விதியல்ல சோதனைகள் ! "
எனப்பலவும் எனக்குணர்த்தும்...
...... அன்புடைய நீ வேண்டும் !!
ஆசானாய் நீ வேண்டும் !!!
ஆருயிர்த் தோழமையாய் ...
என்றென்றும் வேண்டும் நீ!!
எனக்கென்றென்றும் வேண்டும் நீ !!!