ஆண் திமிர் -Mano Red
இன்று கண்ணீர் வந்தது...
ஆனந்தத்தில் அல்ல,
அவனுடன் முதலிரவில்
வரதட்சணைக்காக
முதல் வாக்குவாதம்
அரங்கேறிய போது,
அவன் தீ நாக்கினால்
என்னைப் பொசுக்கினான்
என்பதற்காக...
இன்றும் கண்ணீர் வந்தது...
சாதாரணமாக அல்ல,
நேற்றிரவு நான்கு சுவருக்குள்
அதிகம் படித்த மயிலிறகு என்னை
அவன் மாடாய் நடத்திய போது,
இது தான் இந்தப் பிறவியின்
பாவம் என்பதற்காக....
இன்றும் கண்ணீர் வந்தது...
இது இரக்கமும் அல்ல-யாரும்
இறக்கவும் அல்ல,
நேற்றிரவு
நடத்தையில் சந்தேகப்பட்டு
இரக்கமின்றி அவன்
இதயத்தில் அடித்து
வலியைப் பிழிந்த போது ,
இது கனவில்லை நிஜம்
என்று சொல்வதற்காக...
இன்றும் கண்ணீர் வந்தது...
நாட்டுப் பற்றில் அல்ல,
நேற்றிரவு
குடித்தவன் கரங்களினால்
வன்மையாய்
மென்மை என்னை தாக்கிய போது,
கணவனால் குடும்பம்
நடுத்தெருவில்
நிற்கும் என்பதற்காக...
இன்றும் கண்ணீர் வந்தது...
ஆனால் அழுதது நானல்ல,
எனக்காக பலர்..!!
ஆம் நேற்றிரவு
அவன் வன்முறை தாங்காமல்
என்னுயிர் பிரித்தேன்..!!
வலி பொறுத்திருந்தால்
இன்றும் அழுது தானிருப்பேன்,
எனக்காக
இத்தனை கண்ணீரும்
தேவைப்பட்டிருக்காது ...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
