ஊடல் கடிதம்
நடுஜாம கும்மிருட்டு கழிந்து புலரும் நேரம்
என் தேகத்துக்கு ஓய்வில்லாது உலவும் நேரம்
எழுத்துக்களை தேடி தேடி நானும் அவனும்
மையில் வெள்ளை தாளில் சிறைபிடிக்கும் நேரம்
கருப்பு வண்ணம் தான் எனக்கு ஆயினும்
வித்தியாசமான நீல வண்ணத்தில் கிறுக்கும்
என்னை சுற்றிலும் பார்த்தாலோ தலைசுற்றும்
கசங்கிய தாள்களின் எண்ணில்லா கணக்கும்
என்னை கைப்பிடித்தவன் கதையின் காதலன்
முகவாய் கட்டில் என்னை கீறி கொண்டிருப்பவன்
அப்பொழுதும் அவன் நினைவு முழுவதிலும் காதலி
கதையின் கதாநாயகியின் மேல் பேரார்வலன்
ஆனால் இன்று எனக்குள் என்றுமில்லாத நெருடல்
எதோ சொல்ல வருவதும் பின் மாற்றுவதுமாக தொடரல்
என் நுனி சிந்தும் ஈரம் கலையும்படி உப்புநீர் சிதறல்
காதலன் கண்ணில் இன்றுதான் கண்ணீரின் தளும்பல்
இவன் காதல் சொல்ல சராசரி நான்கு தாள்கள் ஆகும்
ஆனால் பிரிவை சொல்ல அவனுக்கு நாற்பது தாள்கள்
சரி எதோ பெரிய சச்சரவு என்று நான் நினைக்கிறேன்
எட்டு மாதத்திற்கு பின் இவர்களின் காதலில் விரிசல்கள்
கிறுக்கன் நல்ல கோபம் கொப்பளிக்க ஆரம்பிக்கிறான்
அடுத்தவரி குழம்பிபோய் சோகத்தில் சிரமப்படுகிறான்
மூணாவது வரி சொல்லவந்ததை தொலைத்து விட்டு
தாளை கோபத்தில் கிழித்து கசக்கி சுவற்றில் எறிகிறான்
எனக்கோ மனது முழுதும் ரொம்ப பரிதாபம்
காதல்கடித இலக்கணத்தில் பிரிவை சொல்ல ஏது இடம்
சொல்லாமல் சத்தம் போடாமல் இருந்து விட்டால்
தான் என்ன காதலி தானாக புரிந்து கொள்ளட்டும்
ஆனால் இன்னும் நாற்பது தாள் கசங்கியபின் தான்
என் மூளைக்கு உரைத்தது நமது காதலி மேல் காதலன்
கொண்ட காதலின் மூர்க்கத்தனமே இப்படி ஊடலானது
இன்னும் உரம் போட்டு காதலை வளர்க்கத்தான் பார்க்குது