ஆசிரியர் மாணவர் உறவு
உபதேசிக்கப்பட்ட
கீதையின் மூலத்திலிருந்து
உயிர்த்தெழுகின்றனர்...
குருவும் ஓர் சீடனும்!
விழி பிதுங்கச் சீடனும்
வழி சொல்லக் குருவுமாய்
வாழ்க்கை நதி பாயும் வனாந்தரத்தில்
ஒரு சிட்டுக் குருவிக்குக் கிடைத்த
பற்றுக் கொம்பு ஆசிரியர்!
ஆசிரியர்கள்: அடிகளின் வலிகளை
அயலூர் அனுப்பிவிட்டு,
மறுகணம் மலர்வாய்
மாறா இன்முகமாய்.;
என் ஆணவம் ஒருமுறை
ஒடிந்து நிமிரும்!
மாணவர்கள்: ஆடுகள் புகத் தயங்கும்
அரிதாய்ப் புற்கொண்ட
களர்நிலம் நான் நேற்றுவரை!
உன் கைபட்ட பின்
ஆகாயத் தாமரையின்
வித்துகள் விடைத்து நிற்கும்
விளைநிலம் நான் இன்று!
ஆசிரி; உயரமாய் நீ வளர
உம்மில் யாம் வெட்டுவது
கிளைகளை மட்டுமே;
உம் ஆணிவேரில் யாம்
அமுதமழை பொழிவோம்!
மாணவ; அறிவோம்!
உம் சிறகுகளுக்குள் யாம்
சிறை கிடக்கவில்லை:
அடை கிடக்கிறோம்!
ஆசிரி; உம் இருள் கிழித்துப்
பகல் செய்யவே
கண் விழித்துத்
தூக்கம் தொலைக்கிறோம் யாம்!
மாணவ; அறிவோம்!
மின்மினிப் பூச்சிகளைக் கையிலேந்தியபடி
மிரட்டும் இருளுக்குள்
தடுமாறிக் கொண்டிருந்தோம்:
எம் கூரையின் கீழுதித்த
ஒற்றைச் சூரியன் நீவிர்!
ஆசிரி; வலி கொடுப்போம்!- பின்
வாரியெடுப்போம்!
சத்தமிடுவோம்!- பின்
முத்தமிடுவோம்!
எம் செயல் எதுவென்றாலும்
உம் பயன் கருதிடுவோம்!
மாணவ; அறிவோம்!
காரி உமிழ்ந்தீர்!
ஈர மண்ணாணோம்!
கசக்கிப் பிழிந்தீர்!
கலைவடிவானோம்!
களிமண் யாம்!
குயவர் நீர்!
ஆசிரி; புதருக்குள் கிடந்தாலும்
புத்தகங்கள் கிளருவோம்!
மாணவ; தாய்க்கோழி நீர்!
உம் குரல் கொத்திக்
கூரறிவு வளர்க்கும்
குஞ்சுகள் யாம்!
ஆசிரி; நூலெனக் கரைவோம் யாம்!
மாணவ; உமைப் பற்றி
பட்டமென உயர்வோம் யாம்!
ஆசிரி; திசைகளென விரிவோம் யாம்!
மாணவ; உமைத் தொடர்ந்து
சேருமிடம் தெரிவோம் யாம்!
ஆசிரி; எரிமலைக் குளம்புதனில்
எப்படிக் குடிலமைப்பதெனவும்
பூகம்பப் பிளவுகளில்
கால்வாய்ப் பாசனத்தையும் கற்பிப்போம்!
எமது அணுபவத்தையே
உமது அறிவாக்குவோம்!
மாணவ; உலக சாத்திரம்
உம்மால் அறிந்தோம்!
சகல வித்தையும்
கற்றுத் தெளிந்தோம்!
எதிர்த்து வரும் துன்பமும் அலறும்!- அது
எமன் என்றாலும்
அவன் தலை உறுளும்!
ஆசிரி; எப்படிப் பார்த்தாலும்
மாணவர்களிடமும்
கற்றுக் கொள்கிறோம் வாழ்க்கையை!
மாணவ; எப்படியோ?
ஆசிரியர்களே ஆகிப் போகிறார்கள்
வாழ்க்கையாய்!
ஆசிரி; சகோதரனில்லை;
மகனில்லை!
எப்படி வந்ததிந்த அக்கறை?'
எம்மையே கேட்டுக் கொள்கிறோம் யாம்!
மாணவ; சொந்தமில்லை; பந்தமில்லை;
தந்தையுமில்லை!
எப்படி வந்ததிந்த பக்தி?
அதையும்
உம்மிடமே பயில்கிறோம் யாம்!