சரித்திரமாகும் தீவிரவாதம்
'இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையான வாகாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் ஏழு குழந்தைகளும், பத்து பெண்களும் உட்ப்பட 55 பேருக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்' என்னும் அண்மைச் செய்தி நாம் அறிந்ததே. இதற்கு நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாக்கிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் உலகெங்கிலும் பல நாட்டின் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாத அமைப்பான ஜந்துல்லாவும் சமத்தாக பெரும் சாதனையை நிகழ்த்தியது போல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இல்லை இதை செய்தது நாங்கள் தான் என்று தாலிபான் இயக்கம் பெருமையை தட்டிக் கொள்ள பார்த்த வேளையில், அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜந்தல்லா தான் இதை செய்தது என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இதை பற்றிய சூடான விவாதங்கள் எல்லா ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் வந்த வண்ணம் உள்ளன. நம் மக்கள் ஆர்வத்தோடு அலுவலகங்களிலும், பிற சமூக வலைதளங்களிலும் விவாதித்து வருகிறார்கள். எதிர் கட்சிகள் ஆளும் கட்சியை கண்டித்து முதலை கண்ணீரை விஞ்சும் போராட்டங்களை நடத்தும். நாமும் அரசாங்கத்தை மட்டுமே சளைக்காமல் குறை கூறுவோம். பலியானது பக்கத்து நாட்டு மக்கள் தானே என்னும் சோம்பலான எண்ணங்கள் வரும். இத்தாக்குதலில் இறந்த நபர்களின் இரத்தக்கரைகள் மண்ணில் தேய்ந்து புதையும் முன்பே, வேறு சில சிறப்பான செய்திகளால் நாம் இவற்றை எளிதில் மறந்து போவோம். அரசாங்கமும் தன் பங்கிற்கு அலோசனைக் கூட்டங்களை நடத்தி நிச்சயம் எதையாவது செய்தே தீரும். அடுத்த சில காலங்களில் இன்னும் தாக்குதல்கள் நிகழும். மேற்சொன்னவை அனைத்தும் வரிசை மாறாமல் மீண்டும் நடைபெறும். ஆனால் தீவிரவாதம் மட்டும் தனித்த மரமாய் தன் சுதந்திர வேர்களை தளர்த்திக் கொண்டு ஆயிரம் காலத்து உரமூட்டப்பட்ட மரத்திற்கு நிகரான வலுவை பெற்றிருக்கும். வாகாவை கடந்து இந்தியாவினுள்ளும் எளிதாய் தன் கிளைகளை விரிக்கும். தன் சரித்திர சாதனைகளை தீவிரவாதம் எழுதிக் கொண்டே போகும். ஐ-போன்களை காட்டிலும் வரும் காலத்தில் படுகொலைத் தாக்குதல்கள் பிரபலமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும். 'இதைத் தவிர நாம் எதை செய்ய முடியும்?' என்னும் கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்க்கலாம். நானும் பதில் சொல்வேன். அதை பற்றியும் நாம் அலசுவோம். எதிர் விமர்சனங்களை முன் வைப்போம். சுவையான விவாதங்களையும், கருத்தாடல்களையும் நிகழ்த்திக் கொண்டே போவோம். 'சரி, தீவிரவாதத்தை ஒழிக்க என்னதான் வழி சொல்ல வருகிறாய்?' என்று நீங்கள் கோபத்தில் கேட்ப்பது எனக்கு புரிகிறது. நான் பதில் சொல்வதை விட, புகழ்பெற்ற அமேரிக்க ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான நோம் சாம்ஸ்கியின் (Naom Chomsky) கருத்தை இங்கு குறிப்பிடுகிறேன். எந்தவொரு கருத்தையும் எதேனும் ஒரு பிரபலமானவர் சொன்னால் தானே நாம் சட்டென்று ஏற்கிறோம். எந்த ஒன்றிற்கும் ஒரு விளம்பரம் தேவைப்படுகின்றதே!
"எல்லோரும் தீவிரவாதத்தை நிறுத்த கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லது, தீவிரவாதத்தை நிறுத்த ஒரே எளிய வழி, அதில் ஈடுபடாமல் இருப்பது தான்" என்கிறார் சாம்ஸ்கி.
தீவிரவாதத்தில் பங்கு கொள்ளாமல் இருப்பது எளிது தானே! ஆனால் எப்படி 'அல்-காய்தா' இயக்கத்தை 1998-ல் தோற்றுவித்த ஒசாமா பின் லேடன் இறந்த பின்பும், ஏறக்குறைய இருபதினாயிரம் தீவிரவாதிகள் இன்றும் உலகலவில் அவ்வியக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்?' (இந்தியாவில் குறைந்தபட்சமாக முந்நூறு அல்-கொய்தா தீவிரவாதிகள் உள்ளனர்) என்னும் கேள்வி வியப்பை தரலாம். 'தெகரிக் -இ- தாலிபானில்' சுமார் இருபத்தி ஐந்தாயிரம் இளைஞர்கள் தீவிரவாத செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் (தெகரிக் -இ- தாலிபான் என்றால் உருது மொழியில் 'மாணவர் இயக்கம்' என்பது பொருள்). இவர்களை எல்லாம் சாதாரண மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வைக்கத் தூண்டுகோலாய் இருப்பது எது என்னும் கேள்வி எழுகையில், அது 'அறியாமையும், முறையான கல்வியின்மையும்' என்னும் பதிலை நம் ஆழ் மனம் விரைவில் ஒரு விடையாய் தரும். அனைத்து உலக நாடுகளும் மதச் சிந்தனைகளை கடந்த வாழ்வியல் கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களுக்கு வாழ்க்கையின் அவசியத்தை உணர்த்த வேண்டும். பிறரை துன்புறுத்தாமல் நம் வாழ்க்கையை இன்பமான வழியில் அமைத்துக் கொள்ளும் வழியை சொல்லித் தர வேண்டும். இயற்கையோடு அவர்களை உரையாட வைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள இந்துக்கள் சிலர், உலகில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு இங்குள்ள இஸ்லாமிய நண்பர்களை உதாசினப் படுத்துகின்றனர். இன்றைய நிலையில் முகநூல், ட்விட்டர் போன்ற சமூகக வலைதளங்களிளும் தகாத வார்த்தைகளையும், சகிக்க முடியாத பதிவுகளாலும் வெவ்வேறு மதத்தவர்கள் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்கின்றனர். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. காரணம், மதத்தையும் சமூகத்தையும் போட்டு குழப்பிக் கொள்வது தான். நல்ல நூல்கள் தரும் அரிய கருத்துக்களை வெறும் மதிப்பெண்கள் பெற மட்டுமே போதும் என்றாகிவிட்ட நிலையும் ஒரு காரணம். மேலோட்டமான வாசிப்பும், அதனால் விளையும் சிந்தனையும் பல தவறான வழிகாட்டிகளின் கைகளில் இளைஞர்கள் சிக்கிக் கொள்ள வழி வகுக்கின்றன. அதனால் இளைஞர்கள் தங்களையும் அழித்துக் கொண்டு பிறரையும் அழிக்கும் வெறி குணம் கொண்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
தீவிரவாத இயக்கங்களும் இவர்களை பயன்படுத்திக் கொண்டு தங்கள் கொடூர கனவுகளுக்கு இளைஞர்களையும், அப்பாவி மக்களையும் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு, முன்பு குறிப்பிட்டது போன்று 'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது - மனம்
மேலும் கீழும் புரளாது."
என்னும் பட்டுக்கோட்டையின் வரிகள் வாழ்வியல் ஆக்கப்படும் போது தான், தீவிரவாதம் ஒழிந்த சமூகம் இங்கு உருவாகும்.
~ சக்கரவர்த்தி பாரதி ~