வெளிச்சத்தின் முகவரி

சோதனையின் முட்டைக்குள் சுவாசித்துக் கிடப்பவனே
------ உனைச்சுற்றி வளைப்பதுஉன் உறக்கம் - நீ
வேதனையின் வேரறுத்து வெளிவந்தால் உன்முன்னே
------சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கும்

உயரத்தில் ஓரிடமாய் உயிர்வாங்கும் பேய்த்தனமாய்
------ஓசோனில் உள்ளதுபார் ஓட்டை - எந்த
உயரத்தில் இருந்தாலும் உலகத்தை ஒன்றாக்கி
------ஓட்டைக்கு நீபோடு பூட்டை

சேரிகளின் குடிசைகளை மறைத்துவிட்டுப் போகுதுபார்
------தீண்டாமை மேகத்தின் இருட்டு - அதை
சூரியனின் சுடரொளியில் ஒற்றுமையின் நிறம்பூசி
------இன்றோடும் முடியட்டும் விரட்டு

விதியென்று புலம்பிதினம் உழைக்காமல் நீஇருந்தால்
------அனுத்துகளும் அலட்சியமாய்ப் பார்க்கும் - எதையும்
எதிர்கொண்டு நீநின்றால் உலகத்தின் முப்படையும்
------நிச்சயமாய் உன்னிடத்தில் தோற்கும்

கட்சிகளின் கொடியெல்லாம் சவத்துணியாய் ஆகின்ற
------கலவரங்கள் எப்போது முடியும் - பட்டித்
தொட்டியெல்லாம் வாழ்கின்ற பாமரனும் விழித்தால்தான்
------இரவான சுதந்திரமே விடியும்

பயங்காட்ட வைத்திருக்கும் வயற்காட்டு பொம்மைகளாய்
------இருக்கிறது அரசாங்க வேலை - இன்று
வியர்வையிலே குளிக்கின்ற தோழர்களே தொடங்குங்கள்
------சுயதொழிலும் கைக்கொடுக்கும் நாளை

மதவெறியால் கொல்கின்ற மனிதர்களே உம்முடைய
------மனங்களிலே ஏனில்லை இரக்கம் - எந்த
மதமாக இருந்தாலும் இரக்ககுணம் இருந்தால்தான்
------கடவுளெனும் நம்பிக்கை(யே) இருக்கும்

பட்டினியின் கொடுமைகளால் பஞ்சத்தின் சாவுகளால்
------கேட்கிறது அழுகுரலின் ஓலம் - நீ
முட்டிப்பார் பூமியிலே வறுமையெனும் கட்டவிழ்க்க
------முடியுமென சொல்லும்எதிர் காலம்

வானத்துச் சூரியனும் உதிக்காமல் போனாலும்
------வெளிச்சத்தின் முகவரியைக் கண்டு - அந்த
வானத்தில் ஒளியேற்ற புறப்பட்டு நீசென்றால்
------வெற்றிபெற வழிஒன்று உண்டு

எழுதியவர் : ஜின்னா (13-Nov-14, 11:48 am)
பார்வை : 394

சிறந்த கவிதைகள்

மேலே