அன்போடு இருங்கள்

மன்னிப்பே தண்டனை

மன்னியுங்கள்.
மன்னிக்கப்படுவீர்கள்.

தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு
தண்டனையின் கோடரி வீச்சு
தற்காலிகத் தீர்வுகளையே
தந்து செல்லும்.

மாற்றங்களின்
மெழுகுவர்த்திகளை,
மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும்.

தண்டனையின் காயம்
இன்னொரு பிழைக்கு
பிள்ளையார் சுழியாவதுண்டு.
மன்னிப்பின் மடியிலோ
மரணம் கூட மகத்துவமானது.

மன்னிப்பு,
குற்ற உணர்வுகளை
வெற்றி கொள்ளும்.
மற்ற உணர்வுகளை கொஞ்சம்
மாற்றியே வைக்கும்.

தண்டனை
அணைகளைக் கட்டும் முயற்சி.
மன்னிப்போ
வாய்க்கால் வெட்டும் முயற்சி.

தண்டனை,
உடல் சார்ந்த உபாதை,
மன்னிப்போ
மனம் சார்ந்த பாதை.

தண்டனை,
ஒற்றை முகத்தோடு
உலகம் பார்க்கும்.
மன்னிப்போ,
இன்னோர் முகத்தோடு
இதயம் பார்க்கும்.

தண்டனை,
உலகம் பேச
உள்ளத்தை ஊமையாக்கி வைக்கும்.
மன்னிப்போ
மனசை மனசோடு
மதிப்பீட்டு மாநாடு நடத்த வைக்கும்.

தண்டனை,
உயிருக்குள்
கூர்க் கத்திகள் கோத்து வைக்கும்.
மன்னிப்போ
உணர்வுகளின்
துருக் கறைகளை துலக்கி வைக்கும்.

தண்டனை,
அழுத்தமாய் எழுதமுயலும்
சுதந்திரம்,
மன்னிப்பு,
சுதந்திரமாய் எழுதும் அழுத்தம்.

மன்னியுங்கள்.
மன்னிக்கப்படுவீர்கள்......


T .Nisha meharin


j .j college of engineering and technology
ammapettai
trichy 620009

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (14-Nov-14, 6:34 pm)
பார்வை : 91

மேலே