எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம்7 -கவிஜி

மரணம்....ரணம்........ம்......

தேடவும் முடியாத, தேடுவதை தவிர்க்கவும் முடியாத கனமான வனம்.... தேட தேட தொலைந்து கொண்டே போகும் ஒரு கருந்துளைப் புள்ளி...
எப்படி எங்கு ஆரம்பிக்கிறது என்று சொல்லவே முடியாத, உணரவே முடியாத கற்பனையின் வட்டத்துக்குள் புகுந்து விடவே முடியாத ஒருவழிப் பாதை.....

மரணம், யாருக்குத்தான் பிடிக்கிறது.... புத்தர் கூட...என்பது வயது வரை வாழ்வைப் பற்றி தானே போதித்தார்...... அதன் பிறகு அவரின் மரணம்... வாழ்வியலானது வேறு கதை....கதை இல்லாத வாழ்வியல் ஏது...... எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அது அங்கேயே செல்கிறது என்பது வாக்கு....

எதிர்பார்த்த மரணங்கள், எதிர் பார்க்காத தருணங்களை எதிர் கொள்ள வைத்து விடுகிறது....அவன், அந்த மரணத்திற்காக 15 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது..... அல்லது அந்த மரணம் அவன் வருகைக்காக 15 வருடங்கள் காத்திருந்ததோ...... காத்திருப்பதில் உள்ள மரண முடிச்சு.. அவிழ்வதே இல்லை..... சந்தித்த பின்னும்...... வாழ்வே முடிச்சு தானே..!... தொப்புள் கொடியை அறுத்த பின்னும் உடலுக்குள் அறுபடாத ஒரு முடிச்சோடு தானே மனம் இறுகி கிடக்கிறான் மனிதன்....தனக்கு ஒரு பெயர்... தன் ஊருக்கு ஒரு பெயர்....இன்னும் எத்தனையோ அடையாளங்களுடன்.. இருக்கும் மனிதன், சுவடற்று போவது தான், இங்கே.. வரை படாத ஓவியம்.. சிற்பம் இல்லாத சிற்பியின் மனநிலை பிதற்றலாக ஒரு மண்மேடு.. குவிந்து கொண்டே இருக்கிறது... வெறும் எலும்புக் கூடுகளாய்....

அதுவரை ஊரே கொண்டாடிய அந்த பெயர்.. சட்டென்று, "பாடிய எப்போ எடுப்பாங்க" என்று கூறுவதில்.... மானுடம் செத்துப் போவதை வலியோடு கடக்க வேண்டியிருக்கிறது....கடப்பவை எல்லாம்..... கடந்தவையா..... கடந்தவை எல்லாம்... கடப்பவையா..... கடக்க கடக்க கடந்து கொண்டேயிருக்கிறது மனித உயிர்.... உடல் போகும் திசையில் ஒன்றும் இல்லை.. என்பதுதான் அபத்தம்... கேவலம் உடம்பு தானே என்று கூறும் கண்களுக்கு.. கனிவோடு சொல்வது என்னவென்றால்..எத்தனை இயந்திரம் சேர்ந்தாலும் இதயத்துக்கு உணர்வூட்ட முடியாது.. அந்த உணர்வு.. உடல் மூலம் மட்டுமே.... அது தான்.. இதயம் துடிப்பது நின்ற பிறகும் இரண்டு நிமிடம் உயிர் இருப்பது....

உயிரோடு இருக்கும் போது ஒரு புடவை எடுத்து தராத கூட்டம் இறந்த பிறகு பிறந்த வீட்டுக் கோடி... மாடி வீட்டுக் கோடி.... மண்ணாங்கட்டி வீட்டுக் கோடி என்று போர்த்திய போது அவனால் தாங்க முடியவில்லை.... சில விஷயங்களை எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று எப்போதும் ஒரு தடுமாற்றம் இருக்கும்... இந்த விஷயமும் அப்படித்தான்.. எங்கிருந்து ஆரம்பிப்பது.. அந்த பாட்டி அவனுக்கு... சுத்து மிட்டாய் வாங்கி தருமே.... அங்கிருந்தா...... இஞ்சி மிட்டாய் வாங்கி வாங்கி தருமே.... அங்கிருந்தா.... கதிரு அறுக்க கூட்டி போன ஒரு நாளில் தன் முதுகுக்கு பின்னால் படமெடுத்து நின்ற பாம்பை கண்டு கொண்ட அந்த பாட்டி கொஞ்சம் கூட தயங்காமல் சட்டென பிடித்து தூக்கி வீசி எறிந்ததே... அங்கிருந்தா.......?....எங்கு இருந்து ஆரம்பிப்பது?.....

இடம் புரியாமல் நிற்கும் சில சாலையில்..... இடமே புரியாது நிற்பது போல.... அவனின் மனமெங்கும்.. தீ கொண்ட பனி மாலைகள்.... பனி கொண்ட தீ சுடர்கள்... குழி வெட்டிக் கொண்டே இருக்க.....

"ம்ம்ம்.... உங்க பாட்டியும் செத்தவளும் ... ஒண்ணாவேதான் திரிவாளுங்க...... சிநேகிதம்னா.. அப்படி ஒரு சிநேகிதம். நான் கூட சின்ன புள்ளையில இவுங்கள பிரிக்க எவ்ளவோ வேலையெல்லாம் பண்ணிருக்கேன்...ம்ம்ம்ஹும்.. அத்தன நம்பிக்கை ஒருத்தர் மேல ஒருத்தர்க்கு.. பிரியவே இல்லை.... மரணம் தான் அவுங்கள பிரிச்சுது.. உங்க பாட்டி செத்து 15 வருஷம் கழிச்சு இப்போ இவ.. ஆனா உன் பாட்டிக்கும் சேத்து தான் இந்த 15 வருசத்தை இவ வாழ்ந்தா...... இப்ப இருக்கற பசங்க புள்ளைங்க மாரியா.. படிச்சு முடிச்சு கல்யாணம் கட்டிகிட்டா... எல்லாத்துயும் மறந்துட்டு ஆயிரம் காரணம் சொல்லி அப்படியே போய்டறது.. இப்போ ஏதோ கம்பியூட்ர்ல ... சந்திக்கற வசதி எல்லாம் வந்துருச்சாமா . ஆனா அது மனுசங்கள இன்னும் தூர தூரமாத்தான் ஆகிட்டு இருக்கு......."என்றபடியே ஒப்பாரி வைத்துக் கொண்டே கடந்து போனது இன்னொரு பாட்டி....

15 வருட இடைவெளியில் ஊர் மட்டுமல்ல.. ஊர் மக்களின் மன நிலையும் மாறியே இருந்தது.... இன்னும் அவனை நிறையப் பேருக்கு அடையாளம் தெரியவில்லை...ஊருக்கே அடையாளம் தெரியாமல் போனாலும் பரவாயில்லை..... ஆனால் அவளுக்கு...... அவள் என்பது.... அவனின் வாழ்வின் தொடக்கமாக இருந்த அபிதா... மாநிறக் காரி..... சில போது கருப்பின் அழகி.... அவள் கண்கள் மட்டுமே அவனிடம் நிறைய இரவுகளின் நட்சத்திரங்களை உதிர்த்திருக்கின்றன....தோழியாக ஆரம்பித்து.. ஒன்றாக சைக்கிளில் சுற்றி.. பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரங்களை நீளமாக்கிக் கொண்டே சென்ற அவர்களின் ஆழ் மனம் ஒரு நாள் ஒரு மாலை வேளையில்.. நண்பர்களுடன் மின்சார கனவு படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது..... மெல்ல அவளையும் அறியாமல் தோளோடு சாய்ந்து விட்ட தருணத்தில் தான்... முதல் முறை அவன் பறவை ஆனான்....

எந்த நொடியில் அவளைப் பிரிந்தான் என்று இன்று வரை அவனால் யோசிக்க முடியவில்லை.. ஆனால்.. இந்த 15 வருடங்களில் அவளை இன்னும் பத்திரமாக சுமந்து கொண்டே தான் இருந்தான்.. இருக்கிறான்.... அதோ இங்கு நின்று கொண்டிருக்கும் அபிதா.... அவனை பார்த்தாள்... பார்த்துக் கொண்டே இருந்தாள்... பின், திரும்பிக் கொண்டாள்.... மீண்டும் எங்கேயோ பார்வை.. யாரிடமோ பேச்சு... அலைபேசியில் பேச்சு.. பின் ஏதேட்சையாக கண்களில் அவள் கண்கள் பட.. மீண்டும் அவள் திரும்பிக் கொண்டாள்.. முகத்தில் எந்த வித எதிர் பாவனைகளும் இல்லை...... அதே கண்கள்...இன்னும் கொஞ்சம் பெரியதாக... ஆனது போல இருந்தது... அவனுக்கு.. மனம் கனக்கத் தொடங்கியது...

"எல்லாப் படத்திலயும் சொல்ற மாதிரி பொண்ணுங்க எப்பவுமே இப்படித்தனா.....? பழசை எவ்ளோ சீக்கிரதுல மறந்து போயிடறாங்க...." அவனுக்குள் அழுகை வெடிக்கத் தொடங்கியது.. கட்டுப் பட்ட உடல்... இடம் தேடியது.. தனித்து அழ .. அல்லது வெடித்து அழ....

அவன் பண்ணினது தப்பு தான்.... அவ கல்யாணத்துக்கு முந்தின நாள் கூட அவனுக்கு போன் செஞ்சு பேசினா ...." இப்ப என்ன பண்றது"-ன்னு கேட்டா... அவன் தான்... "இன்னும் என் படிப்பு முடியல.. நீ வீட்ல சொல்ற பையனையே கட்டிக்கோ"-னு சொன்னான்.. அவ திட்டிட்டு... "இனி மூஞ்சில முழிக்காத"-ன்னு சொல்லி போன வச்சிட்டா.. "

அதான் இப்போ கூட முழிக்க மாட்டிக்கரா போல... நெஞ்சுக்குள் குருதி வழிவதைத் தடுக்க முடியவில்லை.... மரணம் தேவலாம் போல.... மரணித்துக் கொண்டே இருப்பது கஷ்டம்........அபிதா.... நான் தான் அபிதா.. உன்....

பாட்டியை எடுக்க அனைவரும் ஆயத்தம் ஆனார்கள்.... எப்பவும் போல சண்டையும்... சச்சரவும்... பாட்டி மயானம் நோக்கி அசைந்து கொண்டே செல்ல... வீதி வரை வந்த உறவு... வீதியோடு நின்றது.. வீதி கூட ...

வழியெங்கும் அபிதாவை விதைத்துக் கொண்டே ஊர் வந்து சேர்ந்தான்.......வந்து இரண்டு மூன்று நாட்கள்.... மனதுக்குள் ஒரு பாதாளம் விழுந்து கொண்டே இருந்தது.... அருவியாகி......

மூன்று நாட்களுக்குப் பின்... ஒரு மதிய வேளையில் ஒரு புதிய எண்ணை சுமந்த அலை பேசி அதிர்ந்தது....எடுத்து வழக்கம் போல.. ஹெலோ.....

"ஹே... அஜிபையா.... நான் தாண்டா.. உன் அபிதா டா...."

செத்தே போனான்...... உடல் முழுக்க அலை பேசியின் அதிர்வுகள்... மனம் முழுக்க மயான மௌனத்தின் அழு குரல்கள்....

"ஹே... எப்டி இருக்க..."

"நான் இருக்கறது இருக்கட்டும்.... நீ எப்டி இருக்க..... முதல்ல என்னை மன்னிசிர்டா...

"மன்னிப்பா.. எதுக்கு..... நான் தானே உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் ..."

"சத்தியமா எனக்கு அடையாளம் தெரியலடா... அப்புறமா தான் எல்லாரும் அர்ஜுன் வந்துருக்கான்.. அவுங்க பாட்டியோட பிரெண்ட கூட மறக்காம, சாவுக்கு வந்துருக்கான்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்கும் போது தான். ஓ.. அது நீ ன்னு தெரிஞ்சது... ..... மன்னிச்சுக்கோ அஜி.. உன் சின்ன வயசு முகம் தான் எனக்குள்ள பதிஞ்சிருக்கு........ இந்த15 வருசத்துல நீ எங்க இருக்க, என்ன பண்றேன்னு எதுமே எனக்கு தெரில அஜி... தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினேன்.. அதுவும் ஒரு கட்டத்துல நின்னு போய்டுச்சு..."

"ம்ம்.....ம்ம்......"

"நீயாவது வந்து பேசிருக்கலாம்ல.. அஜி............ மன்னிச்சுக்கோ....அப்புறம், உன்ன தேடிப் பார்த்தேன்.. நீ போய்ட்டன்னு சொன்னாங்க........."

"நான் எப்டி அபிதா வந்து பேசறது.... ..ஏன்னா.. நான் உன்ன ஏமாத்தி இருக்கேன் அபி.... நான் பேசி நீ கண்டுக்காம போய்ட்டா நான் செத்தே போயிருப்பேன்....அதான்....."

"நீ பேசி நான் பேசாமா போவேனா அஜி..... அதான் இந்த 15 வருசத்துலயும் உன் பேர் எந்த பேப்பர்ல வந்தாலும்... எந்த புக்ஸ்ல இருந்தாலும் கீழ கொடு போட்டு போட்டு வைக்கரனே...... அத உன்னத் தவிர யார்கிட்ட சொல்ல முடியும் அஜி....உன் பேர்ல எனக்கு நண்பர்கள் யாராவது வந்தா.... அவுங்களுக்கு வேற பெட் நேம் தான் வைச்சு கூப்டுவேன்.... ஏன்னா அர்ஜுன் எனக்கு நீ மட்டும் தான்....உன் வாயால என் பேர் உச்சரிக்கரத கேக்க 15 வருஷம் காத்திருக்க வேண்டியதா போய்டுச்சில்ல...."

"அபிதா..... என்னை மன்னிச்சிடு அபிதா..... அன்னைக்கு இருந்த...."

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.... நீ நல்ல இருந்தா எனக்கு அது போதும் அஜி... இன்னும் ஒரே ஒரு தரம் இங்க வாடா.. உன்ன ஆசை தீர ஒரு தரம் பாக்கணும் .... உன் பக்கத்துல நின்னு உன்கிட்ட அழுது தீர்க்கணும் .... மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு அழுத்திட்டே இருக்கு.. அத உன்கிட்ட சொல்லணும்........."


மழைக்கு ஒதுங்கிய பாட்டி... கண்கள் விரிய.. அப்புறம் என்றது.....

அப்புறம் என்ன.... ஆண் புத்தி பின் புத்தின்னு புரிஞ்சு.... நம்ம ஹீரோ..... நிறைய விஷயங்கள தேட ஆரம்பிக்கறான்..... காதல்ங்கறது சாதாரண விஷயம் இல்ல.. அது உயிரோட தொடர்பு உள்ள விஷயம்....எல்லா தலை முறையிலும் சில ஆண்களும் சில பெண்களும் அத தப்பாவே புரிஞ்சுகிட்டு தப்பாவே உணர்ந்துக்கறாங்க....... காதல் போயின் சாதல்னு சும்மாவா பாட்டன் பாடினான்.... அதான் அப்பத்தா .... இந்த காதலுக்கு ஏதாவது பண்ணனும்னு தான் 2 மாசம் லீவப் போட்டுட்டு இப்டி காடு காடா சுத்திட்டு இருக்கேன்....என்ற சரவணா மீண்டும் தொடர்ந்தார்....

"என்னடா.. காதலுக்கும் காட்டுக்கும் என்ன தொடர்புபுன்னா.... என்ன பொல்லாத தொடர்பு... உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. இவ்ளோ நேரம் நான் கதை சொல்லி நீ கேக்கலயா.....?... இல்ல. இந்த ரெண்டு நாலா நீ சொல்ற கதையெல்லாம் நான் கேக்கலியா.. கதை தான் அப்பத்தா வாழ்க்கை..... இன்னைக்கு கதை சொல்ற பழக்கமே இல்லாம பண்ணிட்டாங்களே இன்றைய நாகரீக மனிதர்கள்..."

அப்புறம் என்பது போல அப்பத்தா பார்க்க......மீண்டும் ஏதோ தொடர்பில் பேசத் தொடங்கினார் சரவணா....

"காலங்காலமா காதல எல்லாரும் சொல்லிகிட்டேதான் இருக்காங்க.... இதுல புதுசா நான் ஒண்ணும் சொல்லல.. என்னோடு ஆத்மா திருப்திக்கு ஒரு நாவல் எழுதறேன்....பொறந்த மண்ணை விட்டு வேற நாட்டுக்கு போய் வேலை செய்றவனோட கஷ்டம் தான் கதை.... அதுல காதலும் இருக்கு..... காதல்ல தோத்து போய்ட்டா முகத்துல அமிலம் வீசற காதல் இல்ல அப்பத்தா.... நாம காதலிச்சவ நமக்கு கிடைக்கலன்னா கூட அவள வாழ்த்திட்டு ஒதுங்கி போற காதல்.... காதலுக்காக சண்டை போடற காதல்.... காதலிகிட்ட சண்ட போடாதுன்னு சொல்ற காதலதான் இழைச்சு இழைச்சு எழுதறேன்.... அப்பா அம்மா சும்மா பணம் காய்ச்சு கொட்டற மரங்கள் இல்ல... காத்தை உருவாக்கற மரங்கள்னு... பொடனில அடிச்சு சொல்லிருக்கேன்.... சின்ன வயசுல உனக்கு கழுவி விட்டாங்கள்ள.... அவுங்க முடியாம கிடக்கும் போது நீ கழுவுன்னு சொல்ற கதை.....அப்படி, கதைப் படி... தன் முன்னோர்களைத் தேடி போற மாதிரி கதை போகும்..... அதாவது.. கதா நாயகனோட அம்மா.. அவுங்க அம்மா.. அவுங்க அம்மா.. இப்டி ஒரு தொடர்புல அவனோட தாய் வழி முன்னோர்களைத் தேடிப் போறான்..... அப்படி போக கிடைச்ச துருப்புல இந்தக் காட்டுக்குள்ள இருக்கற நூறு வயசுக்கு மேல ஆன ஒரு பாட்டிகிட்ட 4வது தலை முறையோடு பழகிய பதிவு இருக்கு..... அதைத் தேடி தான் இந்தக் காட்டுக்குள்ள வரான்....."

................................................

"சரி இத அங்க உக்காந்தே எழுதலாம்லன்னு நீ கேக்க வரது புரியுது..... மேலே உக்காந்து இருந்தா கீழ இருக்கறவ நிலைமை எப்படி புரியும்.. எப்படி தெரியும்...? இறங்கி வரணும் அப்பத்தா.. நான் இறங்கி வந்துட்டேன்.... மண்ணோட மண்ணா பழகினாதான் மண்ணோட அருமை தெரியும்... எதுக் கெடுத்தாலும் கூகுள்ள தேடினா... செய்முறை அறிவு எப்படி வளரும்.. நெல்லை நேர்ல பாக்காத இளைஞர் கூட்டத்த வெச்சுகிட்டு இந்தியாவ எப்படி முன்னுக்கு கொண்டு போக முடியும்.. கம்பியூட்ரவா திங்க முடியும்....உழைக்காம சாப்டர ஒருத்தன் இன்னொருத்தன் உழைப்பை திருடரானு அர்த்தம் அப்பத்தா..... அதை பத்தியெல்லாம் எழுதறேன்.....நம்ம நாட்டுல இல்லாத காதலா... வீரமா... உறவா.. பாசமா.... எல்லாத்தையும் இங்கிலிஷ்காரன் எடுத்துகிட்டு வீணாப் போனா இங்கிலிஷ மட்டும் விட்டுட்டுப் போய்ட்டான்.. என்ன பண்ண...? இதுங்களும்....நம்ம நாட்டோட பாரம்பரியம் தெரியாம... மூஞ்சிக்கு ரெண்டு இன்சல டிங்கர பூசிகிட்டு திரியுதுங்க... போட்டி போட்டுட்டு கலாசார சீரழிவ பண்றானுங்க அப்பத்தா.. என்ன தான் பண்ண..? என்னால முடிஞ்சது ஒரு கதை எழுதறது.. எனக்கு அது தான் வருது.. துப்பாக்கிய தூக்கினது போதும்.. இனி புத்தகத்த தூக்குவோம்னு, போராடற கூட்டத்துக்கு சொல்லனுன்னு தோணுது.... அதான்....."

மழை....... கொட்டியும் தீரவில்லை..... தீராத அமுத சுரபியோ... மேக கனவு.. உள்ளுக்குள் ஓடிய கவிதைத் துளிகளை சேகரிக்க முடியாமல்.. ஏதோ சத்தம்.....

"அப்பத்தா.... ஏதோ சத்தம் கேக்குது.... ஒரு நிமிஷம் அப்படி மரத்தடில நில்லு.. வந்தறேன்.." என்றபடியே.. சத்தம் வந்த திசை நோக்கி சரவணா ஓட.....

அந்த ஒற்றையடி பாதை ஒரு அருவியிடம் கொண்டு போய் விட்டது..

அங்கே சிறுவர்கள் சிலரும் ஒரு பெண்ணும் மழையில் நனைந்து நடுங்கிய படி ஏதோ கயிறு போல ஒன்றை மரத்தோடு சேர்த்து இழுத்துக் கொண்டு இருப்பது தெரிய...

இன்னும் வேகமாய் முன்னோக்கி ஓடினார் சரவணா.....

15 அடி தூரத்தில்,கண நேரத்தில் காட்சியை உள் வாங்கிக் கொண்ட சரவணா...மழையின் புள்ளிகள்.... வெளியில், ஓட்டை நிரப்பிக் கொண்டு காட்சிகளை மறைக்க மறைக்க... முகம் துடைத்த படி... இன்னும் ஓட்டத்தை வேகமாக்கினார்....அருவியின் ஓரத்தில் பதியும் சரவணாவின் பாதம்... தெளிவாக அழுத்தமாக...ஆழமாக... பதிந்து பதிந்து எழுந்தது.....பாதம் பட்ட இடத்தில் சலார் சலார் என விலகி விலகி இணைந்த நீரின் வலிமை... பாத சுவடுகளில் குட்டி குட்டி யானைகளை சுமந்திருக்க வேண்டும்....

மழைக்குள் மழைத் துளிகளால் ஆன மழை தேகமாக .... மழை கிழித்து ஓடும் சரவணாவின் அதிர்வு.... சிறுவர்களை.... விலகி நிற்கச் செய்தது...... கார்த்திக்காவும்.. செய்வதறியாது விழிக்க....... விழிக்க..........

சரவணா கிட்ட போக போக... ........

கார்த்திக்காவின் கையோடு ஒரு சட்டை அறுந்து விழ..

கீழே சந்தோஷ் அருவிக்குள் போய்க் கொண்டிருக்க........

மரத்தின் கிளை நோக்கி போன சட்டையின் தொடர்பை சரவணா எட்டிப் பிடிக்க... ........

அருவிக்குள் சென்ற சந்தோஷ்... இந்த பக்கம் சரவணாவின் எடையில்... மேல்............ நோக்கி .............................வரத் ................................................................தொ.........டங்................கினார்....

(நன்றி ஆபாவாணன் அவர்களுக்கு......(இணைந்த கைகள் படத்தில் இடைவேளை காட்சி என் மனதுக்கு மிகவும் பிடித்தமான காட்சி.... இங்கே எனக்கு உதவி செய்திருக்கிறது)

கிளையில் அது வரை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெயர் தெரியாத பறவை கிளையின் நடுக்கத்தில் சட்டென பறந்து மழைக்குள் காணாமல் போனது......


இனி....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (15-Nov-14, 3:40 pm)
பார்வை : 361

மேலே