துகிலாத நினைவுகள் - போட்டிக் கவிதை - தேன்மொழி

துகிலாத நினைவுகள் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------

அழுத விழிகளை அன்பால் துடைத்து
கொஞ்சும் மொழியை அழகாய் அளித்த
அன்னை தந்தை - எந்தன்
தேடலின் துவக்கமாய் ..!

அழியா செல்வத்தை என்னில் புகுத்தி
வளரும் அறிவை நதியாய் நகர்த்திய
ஆசான் அவரே - எந்தன்
இருளில் சுடராய் ..!

விலகா வலிகளை விரைவாய் விரட்டி
அயர்ந்த மேனியை மழையில் நனைக்கும்
குழந்தை சிரிப்பே - எந்தன்
கவிதை வரியாய் ..!

மீட்டிய பூக்களாய் புன்னகை தெளித்து
வெறுப்பின் உச்சத்தை நெருப்பால் விலக்கும்
நட்பின் நிழலே - எந்தன்
வாழ்வின் நகர்வாய் ..!

சுயநலம் எரிக்கும் சூட்சமம் படித்து
நிலவின் மடியில் குளிரும் பனியின்
தேகத் தூய்மையே - எந்தன்
தினசரி புரிதலாய் ..!

அலையும் மனதை வெட்கத்தில் வீழ்த்தி
இரவின் கனவை நிஜமாய் நிறுத்தும்
என்னவனின் காதலே - எந்தன்
உயிரின் உணர்வாய் ..!

விவேகத்தின் விடியலை விரலாய் அணிந்து
மனிதத்தின் மிச்சத்தை விருப்பமாய் வைக்கும்
பெண்மையின் புனிதமே - எந்தன்
நெஞ்சத்தின் அழகாய் ..!

தயங்கியப் பொழுதினை அனுபவம் தகர்க்க
அதிசயமாய் அசையும் கனவின் எல்லையில்
சிதறும் இவையே - எந்தன்
துகிலாத நினைவாய் ..!

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (15-Nov-14, 7:35 pm)
பார்வை : 159

மேலே