எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 12

காதல் ஓவியம் 1
குழல் உடைந்தபின்
தென்றல் தேனிசை
பாடுமா
வீணையின் நரம்புகள்
அறுந்த பின்
விரல்களில் நாதம் கேட்குமா
நீரோட்டம் நின்ற மணல்வெளி
ஆறு என்று
பெயர் சொல்லி வாழுமா
காதல் வண்ணங்களைப்
பறித்த பின்
வாழ்கை ஓவியம் ஆகுமா
=======================================================================
புன்னகையுடன் ஓர் அறிமுகம் 2
புன்னகையுடன் நீ
அறிமுகம் ஆனபோது
உன் இரு கண்களில்
ஒரு
கவிதை தெரிந்தது
நீ
மனக் கதவை
மெல்லத் திறந்தபோது
மௌனத்தின்
அர்த்தங்கள்
புரிந்தது
காதல்தான்
உயிர் மூச்சு
என்ற உன் பேச்சினில்
தத்துவம் ஓன்று
மலர்ந்தது
கையோடு கைசேர்ந்து
நீ என்னோடு
நடக்கும் பொது
ஒரு புதிய உலகம்
தெரிந்தது
========================================================================
விடையாக வந்தது 3
குடையாக
நின்றது
கையில்
கோவர்த்தனம்
குழலாக
வந்தது
கையில்
மாமரம்
படையாக
வந்தனர்
பாண்டவர்
தடையாக
நின்றது
வீரனின்
கலக்கம்
விடையாக
வந்தது
கீதையின்
போதகம்
========================================================================
தட்டுங்கள் திறக்கப் படும் 4
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும்
என்றார்
கர்த்தர்
கவிஞர்கள்
நாங்கள்
சொல்வதும்
அதுதான்
========================================================================
காண்பவர் கண்டாள் 5
சிற்பியின் கரங்களில்
கலை வடிவு பெற்று
சிலை ஆகிறது
அதே மனம்தான்
உணர்வுகள்தான்
கற்பனையாளன்
கையில்
கவிதை ஆகிறது
நெஞ்சும்
நினைவுகளும்
எல்லோருக்கும்
ஒன்றுதான்
காண்பவர்
கண்களில்
காதல் ஆகிறது
========================================================================
உனக்காக 6
உனக்காக
ஒரு பாடல்
இசையால்
அல்ல
இதயத்தால்
உனக்காக
ஒரு முத்தம்
உதட்டால்
அல்ல
உள்ளத்தால்
உனக்காக
ஒரு கவிதை
வார்த்தைகளால்
அல்ல
உணர்வுகளால்
உனக்காக
ஓர் ஓவியம்
கோடுகளால்
அல்ல
காதலால்
=======================================================================
கோயில் சிலைகளில் 7
செதுக்கியவன்
பெயரில்லை
அதில்
மிளிரும் அழகு
கலைஞனின்
கையெழுத்து
=======================================================================
யாருக்கு யார் சகுனம் 8
காக்கை இடம் போனால்
அபசகுனம்
வலம்போனால்
சகுனம்
இடம் or வலம்
பூனை குறுக்கே போனாலே
அபசகுனம்
விதவை வந்தால்
அபசகுனம்
சுமங்கலி முன்வந்தால்
சகுனம்
பூக்காரி
பால்காரன்
வர சகுனம்
பால்காரன் வந்தான்
காரை கிளப்புங்கள்
அவசரப்படுத்தினாள் மனைவி
காரை கிளப்பினேன்
பால்காரன் மீதே மோதினேன்
சைக்கிள் சரிந்தது
கேன் கவிழ்ந்து பால் கொட்டியது
வசவார்ச்சனை தொடங்கினான்
பால்காரன்
நானே அபசகுனமாய்
நின்றேன்
========================================================================
ஆடை இல்லாத நிலவு 9
நீல ஆடை போர்த்திய
வானம்
நிலவை பார்த்துச் சிரித்தது
வெட்கம் இல்லை
ஆடை இன்றி வானமெல்லாம்
உலவுகிறாயே ?
நிலவு சொன்னது :
நான் தூயவள்
முகில் திரை மறைத்தாலும்
விலக்கிவிட்டு வந்து நிற்பேன்
தூய காதலர்கள் ஆதமும் ஏவாளும்
தோட்டமெல்லாம் என்னைபோல்தான்
ஆடை இன்றி சுற்றி திரிந்தனர்
ஆப்பிளை கடித்து
ஆடை தேடி ஓடினர்
தூய்மைக்கு துணி தேவை இல்லை
பார்வையில் தூய்மை இருந்தால்
பார்பதெல்லாம் அழகுதான்
வானம் மௌனமானது
நிலவு சிரித்தது
=======================================================================
கீட்ஸ் & ஷெல்லி 10
பின் இருந்து பார்த்தால்
எல்லா பெண்களும்
பேரழகிதான்
பின் நாமெல்லாம்....
கீட்ஸ் & ஷெல்லிதான்
========================================================================
------கவின் சாரலன்