மென்தூறல்

(நம் குடும்பம் சனவரி 2012 இதழில் இடம் பெற்ற மென்தூறல் கவிதை பகுதி)

கூண்டிற்குள் அடைபட்ட கிளி
தனது தனிமையின் பயத்தை
விரட்டி அடிக்க முயல்கிறது
துருப்பிடித்த கம்பிகளின் வழியே

அங்குமிங்கும் தத்தியபடியே
மிழற்றும் அதன் குரலில்
தெறிக்கும் நீராய்ச் சிதறுகிறது
அதன் உயிரின் பீதி

யாரும் அறிய முயலாத
பறத்தல் மறக்கப்பட்ட சிறகுகளுடன்
ஒரு தினையைத் தின்றபடி
தனது கனவுகளை வெளியேற்றி விடுகிறது
எச்சங்களின் ஊடாய் தனது சிறையில்

எவனின் விதிச் சீட்டையோ
அலகால் கொத்தியபடி
கால்களால் கம்பியைப் பிராண்டியபடி..
தெரியும் வானத்தில் திரியும் பறவைகளை
அந்நியமாய்ப் பார்த்தபடி..
தனக்கும் காலனுக்குமான இடைவெளியைக்
கணக்கிட்டுத் தீர்க்கிறது
கூண்டுக் கிளி

எழுதியவர் : நம் குடும்பம் (30-Nov-14, 2:17 pm)
சேர்த்தது : 4455555
பார்வை : 70

மேலே