அலைந்து திரியுது என்னிதயம் -இராஜ்குமார்
அலைந்து திரியுது என்னிதயம்
=============================
இதய கூட்டின் நான்கு அறையில்
நன்கு நிறைந்தாய் - இதோ
அலைந்து திரியுது அவ்விதயம்
இதயம் மீட்டும் அத்துனை துடிப்பில்
நீயே இருந்தாய் - இதோ
அழுது அடங்குது அத்துடிப்பு
விழிகள் ரசிக்கும் ஒற்றை காட்சியில்
தேனாய் வழிந்தாய் - இதோ
எரிந்து முடங்குது அவ்விழிகள்
வழியில் தோன்றும் கற்றை ஒளியில்
கதிராய் ஒளிர்ந்தாய் - இதோ
மறைந்து முடியுது அவ்வழிகள்
செடியில் உதிரும் கொன்றை பூவில்
வாசமாய் மலர்ந்தாய் - இதோ
ஒடிந்து வாடுது அச்செடிகள்
நொடியில் பிறந்த எந்தன் உயிரில்
காதலாய் கலந்தாய் - இதோ
ஓடி ஒளியுது அந்நொடிகள்
மடியில் தவழும் எந்தன் கவியில்
கற்பனை விதைத்தாய் - இதோ
மடிந்து பிறக்குது அம்மடிகள்
- இராஜ்குமார்