புகழ் வெளிச்சத்தில் நீ
படி! படி! - தம்பி,
படி! படி! - நீ
பலருக்கும் பயன்படப்
படி! படி!
முன்னேற வேண்டுமென்ற வெறியோடு - எதிலும்
*** முதலாக வேண்டுமென்ற குறியோடு
தன்னால் முடியுமென்ற துடிப்போடு -வரும்
*** தலைமுறை மாற்றுவதில் பிடிப்போடு ...
பெற்றவர்கள் கூலிஎன்ற உணர்வோடு - நீ
*** பிறந்தது கூரைஎன்ற நினைவோடு
மற்றவர்கள் கேலிபொருட் படுத்தாது - நீ
*** மனதிற்குள் உறுதியாய் நடைபோடு!
நன்னடத்தை உனக்கென்றும் பலமாகும்! - உன்
*** நம்பிக்கைதான் உனக்குற்ற துணையாகும்!
முன்னோடிகள் பலருண்டு வழிகாட்ட! - நீ
*** முன்னேறிச்செல் திறமையை நிலைநாட்ட!
பணம்காசு இல்லைஎன்று தயங்காதே! - மனம்
*** படைத்தவர் உதவுவார் கலங்காதே!
இனம்கண்டு உலகமும் பாராட்டும்! - உன்
*** எதிர்நீச்சல் வளர்ச்சிக்குத் தேரோட்டும்!
மூளைஎன்ப தெல்லாருக்கும் ஒன்றேதான்! - அதை
*** முழுவதும் பயன்படுத் தின்றேதான்!
வேளைவர உழைத்திடு நன்றேதான்! - புகழ்
*** வெளிச்சத்தில் நீவருவாய் அன்றேதான்!