என்னவோ நடக்குது

என்னென்னமோ நடக்குது
எல்லாம் ஓர்நாள் மாறுது
ஆழ்மனமோ அது நோகுது
அவரவர் சுயமோ சிரிக்குது

போராட்டமே வாழ்க்கையாம்
ஆறுதல் சொல்லுது
தோல்வியே வெற்றியாம்
வேதாந்தம் பேசுது

நட்பு கைவிட்டா என்ன..?
நம்பிக்கை இருக்குது
சொந்தபந்தம் போனா என்ன..?
ஒழைக்க திடம் இருக்குது

நல்ல காலம் வந்திடுமாம்
விட்டதெல்லாம் கைகூடுமாம்
கூறுகெட்ட மனம் கூவுது
தோல்விய மறக்க துடிக்குது

அழுது அழுது வத்திபோச்சு
கண்ணீர்கூட தூரமாச்சு
உண்மைய சொல்லி புலம்பிடதான்
ஒருநாதி இல்லாமபோச்சு

அழுதுபார்த்த முயற்சியில
சிரிப்புதானே வந்தது
சிரிச்சபடி புலம்பிகிட்டா - உலகம்
கிறுக்குன்னுதான் சொல்லுது

ஒத்தையில வந்தவங்க
ஒத்தையில போவபோறோம்
கட்டையோடு கட்டையாதான்
கடைசியில வேகப்போறோம்

சேத்துவச்ச சொத்துபத்த
சேத்துகிட்டா சாகபோறோம்
செவிசாய்க்கும் உறவுக்காக
எதுக்கய்யா வாடவேணும்

இனி
உள்ளமட்டும் ஊருக்காக
உதவி
செய்ய வேணும்
உண்மையான சந்தோசத்த
அனுபவிச்சி பாக்கவேணும்

புழுபூச்சி தின்னுத்தீக்க
படைச்ச உடம்பு
பூமியில சிலகாலம்
வாழ்வதெதற்கு....?

யோசிச்சு பாத்தாலே
விளங்கு தையா - இது
யாசகமா கிடச்ச கூடுதானய்யா

கூட்டைவிட்டு உயிர்க்குருவி
பறக்குமுன்ன - இந்த
கூட்டுக்கொரு மரியாதைய
சேர்க்கனு மய்யா

செத்தபின்ன சிலையொன்னு
வச்சிடவேணாம் - என்
சாவுக்கு ஊருசனம்
சேர்ந்தழ வேணாம்

துச்சமின்னு துப்பிய விதையாட்டும்
துளிர்விட்டு வளர்ந்து மரமாகனும்
அலட்சியமா நினச்சிட்ட மனிசனுக்கும்
ஆறுதலா இருந்து நிழல்தரனும்

பாடையில ஊர்வலமா போகும்போதும் - பத்து
சீவனுக்காவது நன்மை செஞ்சிருக்கனும்
எரிமேடையில சாம்பலாகி போகும்போதும் - சிலர்
சந்தோச வாழ்கைக்கு ஆளாகனும்....!

எழுதியவர் : யாழ்மொழி (1-Dec-14, 1:01 pm)
பார்வை : 172

மேலே