அவனும் அவளும்

ரெட்டைச் சடையோ
தொடைச் சுருள் முடியோ
எதனால் காதலுற்றார்கள்
இருவரும்....?

காதலுற்றார்கள்... அப்படியெனவே
அவர்களும்
சொல்லியிருந்தார்கள்....

ஒருபுறம் எல்லையெனக்
கொண்டிருந்த
இரயில் பாதைகளும்
விழுதுகள் விடத் துவங்கியிருந்த
ஆலமரங்களுமான
கிராமங்கள்
மாறியிருக்கவே இல்லை....

நாளொன்றுக்கு இருமுறை
வழிகடக்கும் இரயில்
இரண்டாம் முறையாகவும்
குதறிச் சென்றிருந்தது
பிணமாகியிருந்த அவனை...

இப்படித்தான் வளரவேண்டுமென
விழுதுகளுக்கு
பாடம்சொல்ல.. கயிறுகட்டித்
தொங்கவிடப்பட்டிருந்தாள்
கால்வழி உதிரக்கறைகளோடு
அவளும்....

இது நிகழ்ந்திருந்த
பிரம்ம முகூர்த்தமொன்றில்
அவசரமாய் ..
அலங்கரிக்கப் பட்டிருந்தார்கள்
அவனுக்கான.. அவளும்...
அவளுக்கான.. அவனும்..!

சுற்றிக் குழுமியிருந்த
கடாமீசைகளுக்கு
வெந்து கொண்டிருந்த
கிடாக்கறித் துண்டுகளைப் போலவே...

இன்னொரு எல்லையாகியிருந்த
ஊர்க் கோடிகளின்
பனையோலைக் குடிசைகள்...!!

எழுதியவர் : நல்லை.சரவணா (2-Dec-14, 9:15 pm)
பார்வை : 160

மேலே