அன்பே நீ வந்தபோது -8உன்னைக் கேட்டு யாசிக்கிறேன்
காதல்பூவைப் பறித்தது
உன் கைகளல்ல
உன் கண்களே!
நான் ஒரு
காதல் பட்டாம்பூச்சி
பூவின் காதோடுதான்
பேசுவேன்
என்
இதயப்பூவைக் கேட்டு!
இமைகள் பூத்ததை
எதிரிலேயே பார்த்தேன்
என் எண்ணச் சிறகுகள்
இலைகளாய் உதிர்ந்தன!
கோயில் சிலையென
குமரி நீ வந்தாய்
உன் கண்களில்
கற்பூர தீபங்கள்
என் வார்த்தைகள்
வாய்மூடி வணங்கின!
கனிமுகத்தின் ரசத்தை
கண்கள் வடிக்கிறதா
இல்லை...
பனிமலரின் எழிலை
பாவை குடிக்கிறதா!
உன் வாசலில்
நீ போட்ட கோலம்
அழகானது
அதைவிட அழகானது
உன் கோலம்!
அந்த ஆகாயத்தில்
கை கொடுப்பதும் இல்லை
கட்டி அணைப்பதும் இல்லை
அந்த காதல் குயில்கள்
உன் கண்களைப் போல!
என் ஆகாயத்திற்கு
சிறகு முளைத்து
அசைகிறதே!
அது எங்கு போய்
கூடு கட்டும்
என் இதயத்தைத் தவிர!
ஒரு மூங்கிலை
கொண்டு வந்தேன்
புல்லாங்குழல் செய்ய
ஆனால் குயில் ஒன்று
என்னைக் கூவிக்கொண்டே
வந்தது!
குரல்வளைக் கூண்டுக்குள்
என் குயில் கூடுவதில்லை
அது
எங்கிருந்தோ பாடும்
என் இன்பச் சோலையில்!
கட்டிப் போடப்பட்ட
கம்பியின் ஆசைகள்
கானங்களாய் மாறும்
இந்த வீணையில்
உன் விரல் படும்போது!
எனக்கு
தூது சொல்ல வந்த
தோழிகளா உன் கண்கள்!
காதல் ஓவியத்தின்
காவிய வரிகளை
அன்பின் படபடப்பில்
அதிகமாகவே சொன்னார்கள்!
தூண்டில் போட்டவன்
விழுகிறான் ஆழத்தில்
எல்லாம் ஒரு
மீனின் வேகத்தால்!
காதலி,
கண்ணைக் கொஞ்சம் மூடு
கற்றடிக்காத
நந்தவனத்தைப் பார்ப்போம்!
காந்தத்தில் மை தடவி
கண் என்றாய்
இரும்பு நெஞ்சம்
இனி என்ன செய்யும்!
காதல் போராட்டத்தில்
உன்
கண்கள் ஓயவில்லை
எடுக்க முடியாத
என் உள்ளத்தை
எப்படியும் ஜெயிக்கும்!
ஆளும்போதே
எடுப்பதும் கொடுப்பதும்
எந்த ஆட்சியால் முடியும்
நீயே என்
மண்ணுக்கு மகாராணி!
பகலாய்ப் பூத்து
இரவாய் வாடும்
என் வாழ்வின்
ஒவ்வொரு நாளும்
என் ரோஜாவே!
உன் பேச்செல்லாம்
ஒரு சமாதானம்
உன் கண்களே
எனக்கு சன்மானம்!
இப்போது
என் இதயம்
இருண்டு கிடக்கிறது
அதிலொரு தீபம்
ஏற்றி வை
உன் கண்களைப் போல!
இந்த
யாசகனைக் கண்டு
நீ மனம் கலங்கமாட்டாய்
ஒதுங்கமாட்டாய்
ஓரம் போகமாட்டாய்!
ஏனென்றால்...
நான் கேட்டது
பொருளல்ல!உன்னையே!
(தொடரும்)