தேவதையின் மறுபக்கம் - 4 - யாழ்மொழி
எண்ணமெல்லாம் பரபரப்பில்
என்றுமில்லா வேகத்தோடு
எழுந்திவிட்டேன் படுக்கைவிட்டு
விறுவிறுப்பாய் சுறுசுறுப்பாய்
அவசரமாய் மிக ஆர்வமாய்
கிளம்பிவிட்டேன் வீட்டைவிட்டு
வாகனத்தில் ஏறியதுமே
வந்துநின்ற கேள்வியெல்லாம்
வனிதையின் காதலனை
வம்பிழுப்ப தெப்படி..?
தோழிக்கே உரிய கனவில்
தோகை நான் பயணித்தேன்
செம்மொழி பூங்காவை
சென்றடைந்த நேரம் - எனை
பின்தொடர்ந்த மகிழுந்து
நிறுத்தாமல் ஒலியெழுப்ப
வசவுபாட முயன்றவள்
வாயடைத்து போய்விட்டேன்
அலுவலக நேரத்தில்
இங்கென்ன வேலை என்று
இளித்தபடி கேட்டகுரல் - என்
உயரதிகாரிக் குரியது
அவகாசம் கேட்டுள்ளேன்
அவசர வேலை அதனால் - என்று
அவதியோடு சொல்லிமுடிக்க
அடுத்த கேள்வி அவனே கேட்டான்
பூங்காவிலென்ன அவசர வேலை
புற்கள் எண்ணும் வேலையா
புதுவெள்ளையடிக்க போகிறாயா - இல்லை
காதலனோடு சந்திப்பா...?
அநாகரீக பேச்சில் - சற்றே
ஆத்திரம் அடைந்தவளாய்
பதில்கொடுக்க முயன்றநேரம்
மற்றுமொரு ஆச்சரியம்
அந்த
மகிழுந்து தேர்கதவை
மென்மையாக திறந்துகொண்டு
சிரித்தபடி இறங்கிவந்தாள் - என்
சிந்தை கவர்ந்த தேவதை
என்ன நடக்கிறதிங்கே
எதுவும் விளங்கவில்லை
எதிரிலே அவளிருந்தும்
ஏனென்று கேட்க தோன்றவில்லை
அமைதி விரும்பாதவனாய்
அவனே தொடர்ந்தான்
உனக்கு தெரிந்தால்
திட்டுவாய் என்றாள்
தினம் பயந்தாள் - நீயோ
திறுதிறுவென்று விழிக்கிறாயே
சத்தமிட்டு சிரித்த சிரிப்பு - ஏனோ
சகிக்கவில்லை எனக்கு
என்ன தெரிந்தால்..? என்று
எதிர்கேள்வி நான் கேட்க
இன்னுமா புரியவில்லை - நீ
இங்கே காணவந்தது என்னைதான்
இதை வழிமொழிவதாய் தேவதையும் - அவன்
வலபக்கம் சேர்ந்து நின்றாள்..
அவன் அலுவக பொறுப்பேற்று
ஆறுமாதம் கூட இல்லை
அதற்குள் காதலென்றால்
அர்த்தமானதாய் தோன்றவில்லை
எதிர்த்துபேச தெரியாதென்று
எண்ணியிருந்த தேவதை அன்று - நான்
எடுத்துவைத்த கேள்விக்கெல்லாம்
எனக்கு விருப்பம் என்றே சொன்னாள்
அதற்குமேல் என்னசொல்ல - அதை
நானும் ஆமோதித்தேன்....
(தொடரும்)