காமம் எது காதல் எது
முகநூலில் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்புக்கு நான் எழுதியது....
காதல் என்பது யாது - இந்தக்
---காமம் என்பது யாதெனக் கேட்டார்
ஏதும் அறியாச் சிறுவன் - ஏதோ
---எழுது கின்றேன் கேட்பீர் இதனை
பார்த்துப் பேசும் பொழுது - பெண்
---கண்களைப் பார்த்தே பேசுதல் செய்யும்
சீர்மிகு உணர்வே காதல் - மனஞ்
---செழிப்புறப் பண்பினில் ஓங்கிடும் காதல் !
கண்ணை விடுத்தது மற்ற - பெண்
---காயம் பார்த்து பேசிடல் செய்தால்
உண்மை ! அதுதான் காமம் - சில
---மணித்துளி நின்று மறைந்திடும் கானல் !
காதல் என்பது யோகம் - உளம்
---ஒன்று பட்டாலே மௌனத்தில் ஆழும்
சாதனை யாவது காமம் - இரண்டு
---உடல்கள் சேர்ந்து வளர்த்திடும் யாகம் !
கண்களில் துவங்கிடும் காதல் - இந்தக்
---காமம் என்பதும் அவ்வாறு தானே
விண்வரை வளர்த்திடும் காதல் - ஒரு
---விஞ்ஞானம் நேர்ந்தால் முடிந்திடும் காமம் !
பார்த்ததும் வருவது காமம் - கொஞ்சம்
---பழகிய பின்னே உதிப்பது காதல்
யார்க்கது யாரோ டென்று - இங்கு
---யாரறி வாரோ ! ஆண்டவன் கையில் !
வேகம் மிகுந்த இவ்வுலகில் - நல்ல
---அன்பினைத் தேடும் பசியே காதல்
தேகப் பசியே காமம் - இவை
---தேய்வதும் உண்டு வளர்வதும் உண்டு !
இரண்டிலும் நன்மைகள் உண்டு - கொஞ்சம்
---இன்னல் விளைக்கும் தன்மையும் உண்டு
திரண்டஎன் கருத்தினைத் தொகுத்து - இங்கு
---தீட்டி விட்டேனே தமிழ்க்கவி ஒன்று !
-விவேக்பாரதி