முகிழ்ந்த மலரையும் முத்தமிட்டார்
படத்தைக் கண்டதும் மனதிலே தோன்றியது
கற்பனையே ஆனாலும் கவிதை வரிகளானது
எண்ணத்தில் எழுந்ததை வடித்துப் பார்த்தேன்
எழுத்தாய் மாற்றியதில் கவிதை கதையானது !
------------------------------------------------
தேகம் தேய்ந்திட்ட இப்பெரியவர்
இயன்றவரை உழைத்த இதயமவர்
ஓய்வுபெற்ற ஒழுக்கமிகு நெஞ்சமவர்
ஒரேமகளின் பாசமிகு தந்தையவர் !
அன்றாட பணிகளை முடித்திட்டு
அமைதி நிறைந்த வேளையிலே
அன்றைய நாளிதழை வாசிக்கும்
அன்பான அப்பாவின் காட்சியிது !
விருட்சத்தின் வித்தான விழுதவள்
விழிநீர் துளிர்த்திட காண்கின்றாள் !
பொங்கி வழிந்திடும் உணர்வுகளை
பொழிந்திட அவள் துடிக்கின்றாள் !
தாயில்லாப் பிள்ளையென தன்னை
நோயில்லா கிள்ளையாய் நாளுமே
குறையிலா வளர்த்திட்ட தந்தைக்கு
குறுஞ்செய்தி சொல்ல நினைக்கிறாள் !
ஈட்டிய ஊதியத்தையும் சிதறாமல்
ஊட்டியே வளர்த்திட்ட சிந்தைக்கு
உள்ளத்தில் பிறந்திட்ட காதலை
உள்ளபடி செப்பிட விரும்புகிறாள் !
உண்மை அறிந்தால் அப்பாவின்
உள்ளமும் தாங்கிடுமா என்பதனால்
உள்ளத்து உணர்வுகள் வெப்பமாகி
உடலெங்கும் பரவிட நிற்கின்றாள் !
ஏற்பாரா என்காதலை அவருந்தான்
தோற்போமா தானும் என்றெல்லாம்
இதயத்தில் போராட்டம் நிகழ்வதாலே
இருப்புக் கொள்ளாமல் தவிக்கின்றாள் !
அறியாத காரணத்தால் தொடர்கின்றார்
அகிலத்தின் செய்திகளை படிக்கின்றார் !
இதயத்தின் துடிப்போ மகள்வடிவில்
இல்லத்து நிகழ்வோ இருட்டடிப்பில் !
சொல்லத்தான் துடிக்குது மனமும்
மெல்லத்தான் முடிகிறது நேரமும் !
இறுதியில் வென்றதோ குருதிதான்
உறுதியாய் நின்றதும் உள்ளம்தான் !
குழம்பிய உள்ளமும் தெளிவானது
குற்றமுள்ள நெஞ்சும் உறுத்தியது !
வளர்த்திட்ட தந்தையை தழுவியது
வளைந்திட்ட நெஞ்சம் நிமிர்ந்தது !
விவரம் அறிந்திடா அப்பெரியவரோ
விளக்கம் கேட்காது அனைத்திட்டார் !
நெகிழ்ந்த மனதுடனே சிரித்திட்டார்
முகிழ்ந்த மலரையும் முத்தமிட்டார் !
உதறித் தள்ளாதீர் உயிர்கொடுத்தோரை
கதறிட வைக்காதீர் உருவாக்கியவரை !
இருவீடும் உடன்பட்டு இணைந்திட்டால்
இல்லறம் துவங்கி இன்பமுடன் வாழ்க !
பழனி குமார்