முதுமை
கல்லறையை எதிர்நோக்கிக்
காத்திருக்கும் - இந்த
கிழ மனது
பொய்த்துப் போன
எதிர்பார்ப்புக்கள் நிரம்பிய
தகரப்பெட்டி!
அன்று-
ஆனந்த மேடையாய்
இருந்தபோதெல்லாம்
இளமை இங்கு
நர்த்தனங்கள் புரிந்ததுண்டு !
இன்று-
என்றோ வந்துபோன
சொந்தங்களின் காலோசைகள்
படிப்படியாய் தேய்ந்த பின்பும்
தள்ளாடும் மேனி
தாளங்கள் இல்லாமலே!
கால பிரவாஹத்தில்
காணமல் போன யௌவனத்தை
அசைபோட்டும் அர்த்தமில்லை !
நடந்தே தீரும்
நிதர்சன மரணத்தை
நிந்தித்தும் பலனில்லை!
மண்ணிற்கு உரம் சேர்க்கும்
மனிதச் சருகு !
காலம் போட்டு முடித்த
கணக்குகளில்
பூஜ்யமாய்ப் போகும்
சரியான விடை!
ஆனால்-
இன்று முளைவிடும்
பசுந்தளிர்களும்
தான் காட்டும் பாசத்தில்
நன்றாய் வளருமென்று
நம்பிக்கை கொள்ளும்
நலம் விரும்பி!