பொய் முகங்கள்
மெய்யை போர்வையாக்கி
பொய்யை கோர்வையாக்கி
புன்னகையை போலியாக்கி
நேசத்தையே காசாக்கும்
இவர்கள் -
மெய்யான பொய் முகங்கள் !
சத்தத்தை சந்கீதமாக்கி
சரசத்தை கவிதையாக்கி
உடையை வறுமையாக்கி
பருவத்தை படமாக்கும்
இவர்கள் -
கலைத்தாயின் காவலர்கள்
வெள்ளித்திரையின் கோணல்கள் !
வானவில்லை வார்த்தைகளாக்கி
வாக்குகளை ஏணிகளாக்கி
கலவரத்தை விளம்பரமாக்கி
நிவாரணத்தை நிர்வாணமாக்கும்
இவர்கள் -
சுயநலத்தின் நாற்காலிகள்
எதிர்பார்ப்புகளின் ஏமாற்றங்கள் !
இரவுகளை விடியலாக்கி
வரவுகளை வாடிக்கையாக்கி
வாழ்க்கையை வேள்வியாக்கி
வெளிச்சத்தை பார்கத்துடிக்கும்
இவர்கள் -
உறவுகளின் முரண்பாடுகள்
தாலியைத்தீண்டா மஞ்சள்கள் !
அறிச்சுவடிகளை அடிகற்களாக்கி
ஆசைகளை கட்டணங்களாக்கி
கல்வியை வியாபாரமாக்கி
கனவுகளை சுமக்க வைக்கும்
இவர்கள் -
கலைவாணியின் தேடல்கள்
கல்வித்துறையின் காளான்கள் !
நோய்களை முதலாக்கி
நோயாளிகளை நோட்டுகளாக்கி
மருத்துவமனைகளை மாடிகளாக்கி
குணமாவதை கேள்விக்குறியாக்கும்
இவர்கள் -
விதியின் வழித்தடங்கள்
வெள்ளுடையின் கரும்புள்ளிகள் !
சட்டத்தை கைப்பாவையாக்கி
கயவர்களை கனவான்களாக்கி
கற்பழிப்பை விபச்சாரமாக்கி
கோடீஸ்வரனையும் போண்டியாக்கும்
இவர்கள் -
தருமத்தின் தீண்டாமைகள்
நீதித்தாயின் அவமானங்கள் !
நம்முள் -
எத்தனை பசும்புலிகள் !
என்று மாறும்
இப்பொய்முகங்கள் ! ?