பிறந்த மண்ணுக்கு என்ன செய்தோம்

#பிறந்த மண்ணுக்கு என்ன செய்தோம்..?

பிறப்பெ டுத்தோம் பூமியிலே
பெருமைஎன்ன சேர்த்து வைத்தோம்
இறந்தும் வாழும் வாழ்க்கைக்கே
இனிதா யிங்கு என்செய்தோம்..?

காற்றினில் மாசைக் குறைத்தோமா
கடும்புகை யதனைத் தடுத்தோமா
சாற்றியேக் கொடுமைகள் களைந்தோமா
சதிச்செயல் ஒடுங்கச் செய்தோமா..?

கற்றோம் அமுதத் தமிழைநாம்
கற்பித் தோமா பிள்ளைக்கும்
விற்றோம் மண்ணை வேறெவர்க்கோ
விடியல் மீதினில் மண்தூவி..!

நோய்பல கண்டும் விடவில்லை
நொடிக்கும் நெகிழிக்கு
விடையில்லை
பாயில் வீழ்ந்த்தோம் எழவில்லை
பல்பிணிக் களித்தோம்
நம்உடலை..!

கதிரவன் கோபம் கொள்கின்றான்
கடுப்பினில் பனிமலை
கரைக்கின்றான்
அதிகனல் அகிலம்
ஆகிடுதே
ஆழி நிலத்தில் தாவிடுதே..!

மண்ணை யரிக்க விடலாமா
மாகடல் இல்லத்தில் புகலாமா
விண்ணில் கதிரவன்
தணிந்திடவே
வேண்டிய யாவும்
செய்திடலாம்..!

வெப்ப மாதல் தடுத்திடவே
விரைந்து நாமே செயல்படுவோம்
கப்ப மாக மரம்நட்டு
கதிரவன் தம்மைக்
குளிர்விப்போம்..!

ஆற்றின் நிலத்தை ஆற்றுக்காய்
அளித்தே யதனை
உயிர்பிப்போம்
சேற்றுநிலத்தில்
மனை எதற்கு
சிந்திக்கக் கிடைக்கும்
வழிநமக்கு..!

தொலைத்த நீர்நிலை
கண்டறிந்து
துயர்கள் களைவோம்
மெதுவாக
கொலையுறும் பஞ்சம் ஓர்நாளில்
கொடுமைகள் அழிப்போம் துணிவாக..!

எவர்க்கோ துன்பம் நேருகையில்
எனக்கில்லை என்றே
இருக்காதீர்
துவளும் பேர்க்குத்
தோள்கொடுத்து
துயரம் நீக்கிட
மறக்காதீர்..!

உலகி னுக்கே ஆபத்தாம்
உரைக்கும் அறிவியல்
உணர்வோமே
நிலத்தில் குளுமை உண்டாக்க
நிறைய மரங்கள் நடுவோமே..!

எதையோ செய்தோம்
இத்தனைநாள்
இனியவை செய்வோம்
எதிர்வரும்நாள்
கதைகள் பேசித் திரியாமல்
காரியம் புரிவோம்
அலுக்காமல்..!

பிறந்தோம் இங்கு
இறப்பிற்காய்
பெயரினைப் பொறிப்போம்
நாட்டிற்காய்
திறம்பட செய்யும் சேவைகளால்
சிகரம் தொடலாம்
கூட்டாய்ச்சேர்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (18-Jan-25, 8:34 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 27

மேலே