அம்மாவின் பண்பாடு-ரகு
ஆரத்தழுவி
ஆசுவாசப்படுத்தினாள் என் அம்மா
நான் முதன்முதலில்
எழுந்து நடக்கும்போதும்-பின்
பள்ளிச்சீருடையில்
மிளிர்ந்து நின்றபோதும்
அவள் முத்தத்தின்
ஈரங்கள் காயாமல் இருக்கும்
யுக்தியோ என்னவோ
நெடுநேரம் நீர்த்தேயிருக்கும்
என் சிறுநெற்றி
என்கைபிடித்து
அவள்தான் "அ"எழுதினாள்
என்னுள்ளானப் பரவசத்தில்
அடுத்தஎழுத்தை நானேஎழுதினேன்
நிசப்தஇரவுகளில் பயந்து
என்தூக்கம் கலையும்போதான
அவளின் அரைகுறைத்தாலாட்டை
நான் தூங்கியபிறகு வாங்கிப்போகும்
சாளரம்வழியே நுழைந்து
திரும்பும் காற்று
தவிர்க்கமுடியாத
நெடியதொருப் பயணத்தில்
கதைசொல்லியே
நடக்கவைக்கும் என்னம்மாவின்
முகத்தில் அப்பியிருக்கும்
என் கால்களின் வலிகள்
குழாய்நீராய்
வடிந்துசொட்டிக் காய்ந்துபோன
எனக்கும் அம்மாவுக்குமான
பாசப்பகிர்வின் நினைவலைகள்
தணிவதில்லை நாளும்
காலம் கடந்துவிட்டது
கல்லூரி இறுதியாண்டு
படிக்கும்நான்
நெடுநேரப் பயணக்களைப்பில்
வீடுவந்துசேர்வேன்
கதவுதட்டியது
வெளியாட்களில்லை நான்தான்
என்ற திருப்தியில்
மீண்டும் தொலைக்காட்சியில்
மூழ்கிவிடுவாள் அம்மா
சிலநேரங்களில்
குறுக்கும்நெடுக்கும் நடக்கும்நான்
"தொடரில்" தேடியலைவேன்
என் அம்மா
தொலைத்துவிட்டப் பண்பாட்டை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
