தொப்புள் கொடியில் தூக்கு

[ முன் குறிப்பு: வயிற்றேலேயே இறந்து பிறகு பிறந்த குழந்தையைக் கண்டு ஒரு தாயின் குமுறல்களே இந்த கவிதை....]
கடவுளுக்கே மறதி
உடலை மட்டும் படைத்துவிட்டு
உயிர் கொடுக்காமல் விட்டுவிட்டான்
பிறந்த குழந்தை அழுமாம்
நீ பிறந்தவுடன் மற்றவர்கள்தான் அழுதார்கள்
நீ இருக்கமாட்டாயென்று
என் மார்பகத்திற்கு தெரியவில்லை
தாய்ப்பாலைத் தயாரித்துக் கொண்டு
தடுமாறுகிறது
நீ பிறந்ததால்.....
வயிற்றில் கனம் குறைந்துவிட்டது
ஆனால்....
மனதில் கனம் கூடிவிட்டது
எப்படி நீ இறந்தாய் ?
ஏன் என்னை விட்டு பிரிந்தாய் ?
என் கருப்பை உனக்கு
காற்றை அனுப்பவில்லையா ?
நான் கொஞ்சி பேசியது உன்
காதில் விழவில்லையா ?
என் கற்பனைகனவுகள் உன்
கண்ணில் தெரியவில்லையா ?
என் வயிற்றில் வளர்ந்ததால்
வளர்ச்சியே இல்லையா ?
பிரசவ வேதனைப் பொறுக்க முடியாமல் நான்
அழுததைக் கண்டு அடங்கிப் போனாயா ?
இல்லை
அன்னை அழைத்ததால் பூமிக்கு வந்தாலும் அந்த
ஆண்டவன் அழைத்ததால் அங்கேயே போனாயா ?
என்னை எதற்கு பெற்றாய் என்று உன்
தொப்புள் கொடியில் தூக்குப் போட்டாயா?
இல்லை
பெற்றவளுக்கென்ன தருவது என்று உன்
உயிரை பரிசாய் தூக்கிப் போட்டாயா ?
நான் செய்த தவங்கள் எல்லாம்
வரங்கள் வேண்டாம் என்பதற்காகவா ?
உனது தலையெழுத்தில்
மரணத்தை எழுதிவிட்டுதான்
மற்றதை எழுதியிருக்கிறானோ ?
இருப்பதுதான் இறக்கும் - எப்படி
இறந்தது பிறக்கும் ?
உனது கல்லறையில்
தோற்றம் மறைவு என்று
பொதுவாக எழுத முடியாது
மறைவு தோற்றம் என்று
மாற்றி எழுதவேண்டும்